ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானத்தில் பயணித்து மாயமாகியிருந்த விமானி மீட்கப்பட்டார் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைத்தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த மீட்பு நடவடிக்கையின் போது இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டைகள் இடம்பெற்றன. கடந்த வெள்ளிக்கிழமை எவ்-15 ஈ வகை போர் விமானம் விழுந்து நொறுங்கியதை தொடர்ந்து, அமெரிக்கா மிக விரைவான தேடுதல் மற்றும் மீட்புப் பணியைத் தொடங்கியது.
இதேவேளை, “எதிரி நாட்டு விமானியை” பிடித்து ஒப்படைப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்று ஈரான் அறிவித்திருந்தது. மீட்கப்பட்ட விமானி காயமடைந்த போதிலும் அவர் குணமடைந்து விடுவார் என்றும், ஈரானின் கரடுமுரடான மலைப்பாங்கான பகுதியில் அவர் இருந்ததாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மீட்புப் பணியில் பல விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டதுடன், அமெரிக்க இராணுவம் 24 மணிநேரமும் அவரது இருப்பிடத்தை கண்காணித்து வந்ததாகவும் ட்ரம்ப் மேலும் தெரிவித்தார். பெப்ரவரி மாத இறுதியில் ஆரம்பமான இந்த மோதலுக்குப் பிறகு, ஈரான் மண்ணில் விழுந்த முதல் அமெரிக்க விமானம் இதுவாகும். எனினும், ஏற்கனவே மேலும் இரண்டு அமெரிக்க விமானங்களை தாம் சுட்டுவீழ்த்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
