மலேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி (RTM) நிறுவனத்தின் முன்னாள் பிரபல வானொலி அறிவிப்பாளர் மரியம்மா திஜோ (Mariamah Tijo), தனது 76 வயதில் இன்று வியாழக்கிழமை அதிகாலை காலமானார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாதத்தால் (Stroke) பாதிக்கப்பட்டிருந்த மரியம்மா, சமீபகாலமாகப் பல்வேறு உடல்நலப் பாதிப்புகளுக்காகச் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது என்று, மரியம்மா திஜோவின் மூத்த மகன் முஹமட் ஹாஃபிஸ் ஓத்மான் தெரிவித்தார்.
மரியம்மாவின் உடல் சுபாங் ஜெயா, SS15-இல் உள்ள மஸ்ஜித் தாருல் எஹ்சானில் (Masjid Darul Ehsan) இறுதித் தொழுகைக்காக வைக்கப்படும். பின்னர், இன்று ஸோகூர் (Zohor) தொழுகைக்கு முன்பாக USJ22 இஸ்லாமிய மயானத்தில் உடல் அடக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானொலித் துறையில் தனது வசீகரமான குரலால் பல ரசிகர்களைக் கவர்ந்த மரியம்மா, மூத்த ஊடகவியலாளர்களைக் கௌரவிக்கும் Tabung Kasih@Hawana திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நிதியுதவி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது மறைவு மலேசிய ஊடகத் துறைக்கும், குறிப்பாக வானொலி உலகிற்கும் ஒரு பேரிழப்பாகக் கருதப்படுகிறது. அவரது குடும்பத்தினருக்கு ஊடக நண்பர்களும் ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
