பாரீஸிலுள்ள பிரபல அருங்காட்சியகம் முன் தனது சைக்கிளை நிறுத்திவிட்டுச் சென்ற இளைஞர் ஒருவர், திரும்பிவந்து பார்க்கும்போது சுவாரஸ்ய காட்சி ஒன்றைக் கண்டார்.
ஆம், அவரது சைக்கிளின் இருக்கைக்கு கீழே சுமார் 10,000 தேனீக்கள் கூடி அதை தேன்கூடு போல் மாற்றியிருந்தன.
பாரீஸிலுள்ள Louvre அருங்காட்சியகத்தின் முன் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அத்துடன், அந்த சைக்கிள் நிறுத்தப்பட்ட இடத்துக்கு அருகே மெட்ரோ ரயில் நிலையமும் இருந்தது
தகவல் கிடைக்கப்பெற்ற அதிகாரிகள், உடனடியாக மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயிலை மூடிவிட்டு, தேனீ வளர்ப்பவர் ஒருவரை அழைத்துள்ளனர்.
அந்த தேனீ வளர்ப்பவர் வந்து அந்த சைக்கிள் இருக்கையில் கீழ் கூடியிருந்த தேனீக்களை பாதுகாப்பாக தேனீக்கள் வளர்க்க பயன்படுத்தும் பெட்டி ஒன்றிற்குள் மாற்றி அங்கிருந்து எடுத்துச் சென்றுள்ளார்.
அந்த சைக்கிளின் உரிமையாளர் இந்த காட்சிகளை சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்டுள்ள நிலையில், அது தனது தாத்தாவின் சைக்கிள் என்றும், அதை தான் அருங்காட்சியகம் முன் நிறுத்தி அரை மணி நேரம் ஆவதற்குள் தேனீக்கள் அதன் இருக்கையை தேன்கூடு போல் மாற்றிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
