மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் (டி.எம்.சி.) தலைவர் மம்தா பானர்ஜி கடந்த 15 ஆண்டுகளாகக் கட்டி எழுப்பியிருந்த கோட்டையை பா.ஜ.க. தகர்த்துள்ளது.
மேற்குவங்கத்தில் 207 தொகுதிகளைக் கைப்பற்றி பாஜக அபார வெற்றி பெற்றிருக்கிறது. திரிணமூல் காங்கிரஸுக்கு 80 தொகுதிகள் கிடைத்துள்ளன
மேற்கு வங்கத்தில் கடந்த 2011இல் டி.எம்.சி. முதன்முறையாக ஆட்சிக்கு வந்தது. இடதுசாரி கட்சிகளின் கோட்டையாக திகழ்ந்த பகுதிகளைத் தகர்த்து, மம்தா பானர்ஜி வரலாற்றுச் சாதனை படைத்தார். எனினும், கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த டிஎம்சிக்கு எதிராக, ஆட்சியாளர் மீதான அதிருப்தி அலை உருவானது.
மேற்கு வங்கத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் பா.ஜ.க. ஒரு சிறிய கட்சியாக இருந்தது. 2016 சட்டப்பேரவை தேர்தலில் 10வீதம் வாக்குகளை மட்டுமே பெற்றது. ஆனால், 2021 தேர்தலில் பா.ஜ.கவின் வாக்கு 38வீதமாக உயர்ந்தது. இதில் 77 தொகுதிகளைப் பெற்ற பாஜகவுக்கு 2024 மக்களவைத் தேர்தலில் வாக்கு விகிதம் 39 வீதமாக கூடியது.
இந்த தேர்தலிலும் முதல்வர் மம்தா பானர்ஜி ஒரு பிரபலமான மக்கள் தலைவராகவே திகழ்ந்தார். இருப்பினும், வேலையின்மை, ஊழல், நிர்வாகச் சீர்கேடுகள் போன்ற முக்கியப் பிரச்சினைகளை முன்வைத்து, மம்தா அரசை பா.ஜ.க. மிகத் தீவிரமாக விமர்சித்தது. பா.ஜ.கவின் இந்த செயல்பாடுகள், வாக்களிக்கும் முடிவு குறித்து தயக்கத்துடனும் குழப்பத்துடனும் இருந்த வாக்காளர்களை தங்கள் பக்கம் ஈர்த்தன.
கடந்த சில ஆண்டுகளாக, டிஎம்சி அரசு பல முக்கிய ஊழல் குற்றச்சாட்டுகளையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டது. இதில், பள்ளி ஆசிரியர் நியமன முறைகேடு மற்றும் பொது விநியோகத் திட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் முக்கியமானவை.
கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனை மற்றும் சந்தேஷ் காலி பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாடு முழுவதிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது, மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என தேர்தல் பிரச்சினையாக மாறியது. அண்டை நாடான வங்க தேசத்தினரின் ஊடுருவல், மேற்கு வங்கத்தில் நீண்ட காலப் பிரச்சினையாக உள்ளது.
ஊடுருவல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக பா.ஜ.க. அளித்த உறுதிமொழிக்கு பலன் கிடைத்துள்ளது. இந்து வாக்காளர்களை ஒன்று திரட்டுவதில் வட மாநிலங்களைப் போல் மேற்கு வங்கத்திலும் பா.ஜ.க. தீவிரம் காட்டியது. இந்து வாக்காளர்களுக்கு எதிராக டிஎம்சி அரசு பாகுபாடு காட்டுவதாக வெளிப்படையாகக் கூறியதும் வாக்குகளாக மாறியுள்ளது.
பெண் வாக்காளர்களைக் குறிவைத்து, மாதம் ரூ.3,000 நிதியுதவி, பேருந்துகளில் இலவசப் பயணம், கர்ப்பிணிகளுக்கு ரூ.21,000, 124 யூனிட் இலவச மின்சாரம் போன்ற வாக்குறுதிகளும் பா.ஜ.க. ஆட்சி அமையக் காரணமாகி விட்டன.
