தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு, ஈழத்தமிழர்கள் சார்பாகத் தமிழ்த் தேசியப் பேரவை தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளதுடன் முக்கிய கோரிக்கை அடங்கிய கடிதமொன்றையும் அனுப்பியுள்ளார்.
ஈழத்தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் மே 18ஆம் திகதியை ‘முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாளாக’ உலகெங்கும் வாழும் தமிழர்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.
இந்தச் சூழலில், புதிய முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசாங்கம், தனது முதலாவது சட்டசபை கூட்டத்தொடரிலேயே ஈழத்தமிழர் விவகாரம் குறித்த புதிய தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 2013ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில், ஈழத்தமிழர் மீது நடைபெற்றது ‘இனவழிப்பு’ என்றும், அதற்குச் சர்வதேசக் குற்றவியல் விசாரணை அவசியம் என்றும் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை புதிய அரசு வழிமொழிய வேண்டும் என்று அதில் கோரப்பட்டுள்ளது.
தமிழகத்தின் புதிய அரசாங்கம் எடுக்கும் இந்த முன்னெடுப்பானது, சர்வதேசக் குற்றவியல் விசாரணையை வலியுறுத்திப் போராடி வரும் ஈழத்தமிழர்களுக்குப் பெரும் பலத்தைச் சேர்க்கும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் வலியுறுத்தியுள்ளார்
