யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்ட அரச மருத்துவமனைகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான இருதய நோயாளிகள் சத்திரசிகிச்சைகளுக்காக நீண்டகாலமாக காத்திருப்புப் பட்டியலில் உள்ளனர் என்று மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான செலவுகள் பன்மடங்கு அதிகரித்துள்ளதால், சாதாரண மக்களால் உயிர்காக்கும் சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
கூட்டமைப்பின் தலைவர் மருத்துவர் சமல் சஞ்சீவ இது குறித்துத் தெரிவிக்கையில்,
தனியார் மருத்துவமனைகளில் இதய சத்திரசிகிச்சைக்கான அடிப்படைச் செலவு தற்போது 15 இலட்சம் ரூபாயைத் தாண்டியுள்ளது. நோயாளி மருத்துவமனைகளில் தங்கியிருக்கும் காலம் மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் வழங்கப்படும் சிகிச்சைகளைப் பொறுத்து இந்தச் செலவு மேலும் அதிகரிக்கக்கூடும். இதனால் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் பாரிய பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கின்றன.
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு., கொழும்பு தேசிய மருத்துவமனை, கண்டி, அநுராதபுரம், கராப்பிட்டி போதனா மருத்துவமனைகளில் மட்டும் சுமார் 10 ஆயிரம் நோயாளிகள் சத்திரசிகிச்சை மற்றும் நோய் கண்டறியும் பரிசோதனைகளுக்காகக் காத்திருக்கின்றனர்.
சில நோயாளிகள் தமது சத்திரசிகிச்சைக்காக 29 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சில அரச மருத்துவமனைகளில் அத்தியாவசிய சத்திரசிகிச்சை உபகரணங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன், நோயாளிகள் தமது இரத்தப் பரிசோதனைகளைத் தனியார் நிறுவனங்களில் மேற்கொள்ள வேண்டியுள்ளமையும் நிலைமையை மோசமாக்கியுள்ளது.
இதய சத்திர சிகிச்சைகளுக்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும் நடைமுறையில் அத்தகைய உதவிகள் முறையாகச் சென்றடைவதற்கான ஆதாரங்கள் மிகக் குறைவாகவே உள்ளன.
மேலும், நாட்டில் முறையான தேசிய சுகாதாரக் காப்புறுதித் திட்டம் இல்லாதது, தனியார் துறையில் சிகிச்சை பெறுவோருக்குப் பெரும் சுமையாக மாறியுள்ளது. எனவே, அரசாங்கம் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
