கம்பஹா – மல்வானையில் யாராலும் உரிமை கோரப்படாத வீட்டையும் காணியையும் பல்கலைக்கழகம் அல்லது வேறு மக்கள் பாவனைக்கு வழங்குமாறு கோரி அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களிடம் இருந்து திருடப்பட்ட சொத்துகள் மீண்டும் மக்களிடமே கையளிக்கப்படும் என தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது வழங்கிய வாக்குறுதியை நினைவூட்டியே மாணவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இடவசதி குறைவாகக் காணப்படும் பல்கலைக்கழகங்களின் தேவைக்காகவும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காகவும் குறித்த சொத்துக்களைப் பயன்படுத்துமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த வீட்டுக்கு எவரும் உரிமை கோராத நிலையில், இது முன்னதாக நீதி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது.
இந்த வீட்டுக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்த பின்னணியிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பின்னர், குறித்த காணி மற்றும் வீட்டை ஏலத்தில் விற்பனை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. கடந்த ‘அறகலய’ போராட்டக் காலத்தில் ஒரு குழுவினரால் இந்த வீட்டிற்குத் தீ வைக்கப்பட்டதில், வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்திருந்தது. இந்த இடத்தில் சர்வதேச நீதிபதிகள் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையமொன்றை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், நீண்ட காலமாக அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இந்த நிலையிலேயே, உரிமையாளர் இல்லாத இந்தச் சொத்தை மாணவர் சமூகத்திடம் ஒப்படைக்குமாறு அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
