முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் விதிக்கப்பட்டிருந்தமை போன்று அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
கொழும்பு ஊடகமொன்று அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.
மேலும், மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட பிராந்திய மோதல்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை ரூபாயை நிலைப்படுத்தவும் தேவையற்ற செலவினங்களைக் கட்டுப்படுத்தவும் அரசாங்கம் பல மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது.
இதன்படி, அத்தியாவசியமற்ற இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தவும் 2022 பொருளாதார நெருக்கடியின்போது எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகளை மீண்டும் நடைமுறைப்படுத்தவும் அரசாங்கம் திட்டமிடுகிறது.
வாகன இறக்குமதிகளை மட்டுப்படுத்துவதற்கும், ரூபாய்மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்கும் கடந்த வாரம் விதிக்கப்பட்ட வாகன சுங்க வரிகள்மீதான 50 வீத கூடுதல் கட்டணத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிப்பதும் இந்த நடவடிக்கைகளில் அடங்கும்.
தற்போது வர்த்தக வாகனங்களுக்கு 70 வீதமாகவும், தனியார் வாகனங்களுக்கு 50 வீதமாகவும் உள்ள வாகனங்களுக்கான கடன்-மதிப்பு வரம்பை அதிகரிப்பது குறித்தும் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
கடந்த ஆண்டு பெப்ரவரி முதல் வாகன இறக்குமதிக்காக மட்டும் கிட்டத்தட்ட 200 கோடி அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
2022 பொருளாதார நெருக்கடியின் போது நடைமுறைப்படுத்தப்பட்டது போலவே, அந்நியச் செலாவணியைச் சேமிப்பதற்காக அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவது குறித்தும் பேச்சுகள் நடைபெற்று வருகின்றன.
கடுமையான அந்நியச் செலாவணிப் பற்றாக்குறை காரணமாக மத்திய வங்கி 2022 இல் 367 ‘அத்தியாவசியமற்ற’ பொருட்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்தியது.
இவ்வாறு கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களில் வீட்டு உபயோக மின் சாதனங்கள், ஆடைகள், சுகாதாரப் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், அத்துடன் தலைமுடி மற்றும் உடல் பராமரிப்புப் பொருட்கள் ஆகியவை அடங்கும்.
மேலதிகமாக புதிய பழங்கள், மீன், பால் பொருட்கள், தானியங்கள், மாவு, மினரல் மற்றும் கார்பனேற்றப்பட்ட நீர், பியர், சைன் மற்றும் மதுபானம் போன்ற பரந்த அளவிலான உணவு மற்றும் பானங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் பேச்சு நடத்தி வருவதாகவும் தெரியவந்துள்ளது. ரூபாயின் மதிப்பு சரிவு மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக, இந்த ஆண்டு மே மாத நிலவரப்படி நாட்டின் சராசரி மாதாந்திர எரிபொருள் செலவு 100 மில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 522 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது என்றும் அந்த அதிகாரி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
2022-ஆம் ஆண்டைப் போலவே, ஏற்றுமதியாளர்கள் ரூபாயின் மதிப்பு மேலும் பலவீனமடையும் வரை காத்திருப்பதாகவும், தாங்கள் ஈட்டும் அந்நியச் செலாவணியை நாட்டிற்குள் கொண்டுவரவோ அல்லது அதனை ரூபாயாக மாற்றவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.
