காணி விடுவிக்க இராணுவம் சம்மதிக்கவில்லை: அமைச்சர் கூறுவது பொய் – கஜேந்திரகுமார் சாடல்

யாழ்ப்பாணத்தில் காணி விடுவிப்பு தொடர்பில் இராணுவத்தினர் எந்த விதமான சாதகமான பதிலையும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், கடற்றொழில் அமைச்சர் மக்களை ஏமாற்றும் விதமாக கருத்துகளை தெரிவித்துள்ளார் – இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கொக்குவிலிலுள்ள அவரின் கட்சித் தலைமையகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

‘காணி விடுவிப்பு தொடர்பில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு பிரதி அமைச்சரின் பங்கேற்புடன் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது. அதில், இராணுவ தரப்பினர் காணி விடுவிப்பு தொடர்பில் எந்தவொரு சாதகமான பதிலையும் தெரிவிக்காதமையாலேயே கூட்டம் நிறைவடைந்தது.

மக்கள் எதிர்பார்க்கும் எந்தவொரு முடிவையும் சாதகமாக எடுக்காமல் காணி விடுவிப்பு தொடர்பில் இராணுவத்தினர் பல சமயங்களில் திட்டவட்டமாக நிராகரித்தும் சில விடயங்களில் பரிசீலிப்போம் என்று தட்டிக்கழிக்கும் பதிலையும் கூறியுள்ளனர். மக்கள் எதிர்பார்க்கும் எந்தவொரு விடயமும் சாதகமாக முடிவெடுக்கப்படவில்லை.

ஆனால் மூடிய அறைக்குள் நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பில், கடற்றொழில் அமைச்சர் வெளியே வந்து ஊடகங்களுக்கு முன்னால் சாதகமான பல விடயங்கள் நடைபெற்றுள்ளன. விரைவில் தீர்வுகள் காணப்படும் என்று அப்பட்டமான பொய்யைக் கூறியுள்ளார்

இந்த பொய்யை மக்கள் மட்டத்தில் விதைக்க தான் தமது கட்சி சாராத மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. அதேபோல வலி. வடக்கு பகுதி தொடர்பில் வலி.வடக்கு பிரதேச சபையினரை அழைத்து இருக்க வேண்டும். அவர்களையும் அழைக்கவில்லை. மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை அழைக்காது மூடிய அறைக்குள் மக்கள் பக்கம் இருந்து பேசக்கூடிய விடயங்களை பேசாது வெளியே வந்து மக்கள் மத்தியில் நம்பிக்கையை விதைக்கும் வகையில் பொய் சொல்வது கண்டனத்துக்கு உரியது – என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles