தமிழ்நாட்டில் இலங்கை தமிழ் பெண் ஒருவர் திட்டமிட்ட விபத்தின் மூலம் கொல்லப்பட்டார். அத்துடன், அவருடன் சென்ற சிறுமி படுகாயமடைந்துள்ளார்.
சென்னை – கோயம்பேடு – இரவு விடுதி ஒன்றின் அருகே நேற்று சனிக்கிழமை இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 18 வயதான ஜோன்சி என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டார்.
இரவு விடுதியில் ஏற்பட்ட மோதலே இந்தக் கொலைக்குக் காரணம் என்று விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. கொலையான யுவதி தனது தோழியை சந்திக்க வந்துள்ளார். இதன்போது, அங்கு சிலர் மது அருந்தி நடனமாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது, அவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மோதலில் ஈடுபட்டவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றினர். அவர்கள் விடுதிக்கு வெளியே வந்தபோதும் பதற்றம் தணியவில்லை – மோதல் தொடர்ந்தது.
அப்போது, ஆத்திரமிகுதியால் மோட்டார் சைக்கிளில் சென்றவரை காரில் பயணித்தவர் வேண்டுமேன்றே மோதினார். இதில்,
மோட்டார்சைக்கிளில் சென்ற ஜோன்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிறுமி ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
விபத்தை ஏற்படுத்தியவர்கள் சென்ற காரில் தி.மு.க. கட்சியின் கொடி பறக்கவிடப்பட்டிருந்தது. ஜோன்சி உள்ளிட்டவர்கள் மூன்று மோட்டார் சைக்கிளில் சென்றனர் என்று கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
