நெல்லுக்கான நியாயமான விலையினை பெற்றுத்தரக் கோரி, கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கமக்கார அமைப்புக்களின் ஏற்பாட்டில் கிளிநொச்சி விவசாயிகளால் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டப் பேரணி கிளிநொச்சி ஏ-9 வீதியின் சித்தி விநாயகர் ஆலய முன்றிலில் இருந்து கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டது. பேரணியின் முடிவில் ஜனாதிபதி மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர், விவசாய அமைச்சர் உள்ளிட்டோருக்கான மகஜர் ஒன்று மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரனிடம் கையளிக்கப்பட்டது.
அரசாங்கம் தற்போது ஒரு கிலோ நெல்லை 120 ரூபாவுக்கு கொள்வனவு செய்வதாகவும், இது உற்பத்தி செலவுக்கு போதுமானதாக இல்லை எனவும் தெரிவித்த விவசாயிகள், 135 ரூபாவுக்கு அரசாங்கம் நெல்லை கொள்வனவு செய்யவேண்டும் என வலியுத்தியிருந்தனர்.
