சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யுடன் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பாண்மையுடன் வெற்றி பெற்று சில கட்சிகளின் ஆதரவுடன் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் தவெக அரசு அமைந்துள்ளது.
இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக, 4 இடங்களில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 2 இடங்களில் வெற்றி பெற்றது.
த.வெ.கவுக்கு திமுக கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சிகள் ஆதரவளித்த நிலையில் ம.தி.மு.க. தனிச் சின்னத்தில் போட்டியிடாததால் தவெகவுக்கு ஆதரவளிக்க முடியாமல் போனது. இதையடுத்து முதல்வரான பிறகு விஜய், மரியாதை நிமித்தமாக வைகோவைச் சந்தித்து வாழ்த்துபெற்றார்.
முன்னதாக, நேற்று வைகோவை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரில் சந்தித்திருந்த நிலையில், முதல்வருடன் இன்று வைகோ சந்திப்பு நிகழ்த்தினார்.
த.வெ.க.வுக்கு ஆதரவாக வைகோ, துரை வைகோ பேசி வரும் நிலையில் முதல்வர் விஜய்யுடனான சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
முதல்வர் விஜய்யைச் சந்தித்து, ஸ்டெர்லைட்டுக்கு மீண்டும் அனுமதியளிக்கக்கூடாது என வைகோ வலியுறுத்தினார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
