உலகின் முதல் ‘ட்ரில்லியனர்’ (Trillionaire) என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்த இரண்டே வாரங்களுக்குள், தொழிலதிபர் எலோன் மஸ்க் அந்த அந்தஸ்தை இழந்துள்ளார்.
அவரது ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் பங்குகள் சந்தையில் பாரிய வீழ்ச்சியைக் சந்தித்ததைத் தொடர்ந்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் (Bloomberg Billionaires Index) படி, எலோன் மஸ்கின் சொத்து மதிப்பு சுமார் 350 பில்லியன் அமெரிக்க டொலர்களால் சரிவடைந்துள்ளது.
இதன் காரணமாக, இந்த மாத தொடக்கத்தில் 1.3 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாகக் காணப்பட்ட அவரது நிகர சொத்து மதிப்பு, தற்போது சுமார் 957 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் உலகமே பெரிதும் எதிர்பார்த்த ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீட்டைத் (Public Listing) தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பும் எலோன் மஸ்கின் தனிப்பட்ட சொத்து மதிப்பும் வெகுவாக அதிகரித்தன.
இதன் மூலமே அவர் 1 ட்ரில்லியன் அமெரிக்க டொலர் என்ற மைல்கல்லைக் கடந்து சாதனை படைத்திருந்தார். எனினும், அதன் பின்னர் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் அவற்றின் உச்ச வரம்பிலிருந்து 30 சதவீதத்துக்கும் மேலாக வீழ்ச்சியடைந்துள்ளன.
அத்துடன் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளும் சரிவைச் சந்தித்ததால், எலோன் மஸ்கின் பெருமளவிலான சொத்துக்கள் கரையத் தொடங்கின. இந்தத் திடீர் சொத்து வீழ்ச்சிக்கு மத்தியிலும், எலோன் மஸ்க் உலகின் பெரும் பணக்காரர்கள் வரிசையில் இன்னமும் முதலிடத்திலேயே நீடிக்கின்றார்.
அவரது சொத்துக்களில் பெரும்பகுதி ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் பங்குகளிலேயே முதலீடு செய்யப்பட்டுள்ளது.
உலகின் முன்னணி செல்வந்தர்களின் சொத்துக்கள், பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்கள் மற்றும் நிறுவனங்களின் சந்தை மதிப்புகளோடு எவ்வளவு நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன என்பதையும், அவை எவ்வளவு வேகமாக மாறக்கூடும் என்பதையும் இந்தச் சரிவு வெளிப்படுத்தியுள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
