குற்றங்களை செய்த எவரும் தப்புவதற்கு தற்போதைய அரசாங்கம் இடமளிக்காது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
விசேட உரையொன்றை ஆற்றிய அவர் வெள்ளை வேன் கடத்தல் , படுகொலைகளை இந்த நாட்டு மக்கள் மறந்துவிடவில்லை என்றும் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
“இன்று நியாயம், நீதி, ஜனநாயகம் மற்றும் நல்லாட்சி என்பவற்றை எதிர்க்கட்சியால் தாங்கிக்கொள்ள முடியாமல் உள்ளது. அரசுக்குள்ளே இருந்து கொண்டு, அரச அனுசரணையுடன் குற்றங்கள் இழைக்கப்பட்டிருந்தால், அந்த குற்றவாளிகளை வெளிப்படுத்தக் கூடாதா? அது நாட்டை காட்டிக்கொடுப்பதா? அது தேசத்துரோகமா? இல்லை, அது ஒரு நாகரீகமான அரசை கட்டியெழுப்பும் நோக்கமாகும். எமது அரசை நாம் ஒரு நாகரீகமான அரசாக மாற்ற வேண்டும்.”
“நமது நாடு ஒரு ஊழல் நிறைந்த அரசாக இருந்தது. எமது இராணுவம், புலனாய்வுப் பிரிவினர் மீதான கௌரவம், பாராட்டு மற்றும் விசுவாசம் எமக்கு உள்ளது. ஆனால், எமது இராணுவமும் புலனாய்வுப் பிரிவினரும் நாட்டின் பாதுகாப்புக்காகவும், மக்களின் பாதுகாப்புக்காகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றும்போது, அவர்கள் எங்கேனும் அநீதிக்குள்ளானால் நாம் அவர்களுக்காக முன்னிற்போம்.
உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் மக்களின் பாதுகாப்புக்காகவும், நாட்டின் பாதுகாப்புக்காகவும் இராணுவமும் புலனாய்வுப் பிரிவும் செயற்பட்டிருந்தால், அவர்களை எந்த இடத்திலும் பாதுகாக்கவும் கௌரவிக்கவும் நாம் கடமைப்பட்டுள்ளோம். அந்தப் பணியை நாம் செய்வோம்.”
“ஆனால், இராணுவத்திலோ அல்லது புலனாய்வுப் பிரிவிலோ உள்ள ஒரு சிறிய குழுவினர், ஏதேனும் ஒரு குடும்பத்தின் அதிகாரத்துக்காக அல்லது ஒரு அரசியல் முகாமின் அதிகாரத்துக்காக அரச தேவையின் பேரில் குற்றங்களைச் செய்திருந்தால், அவர்களுக்குரிய தண்டனையை வழங்க எமது அரசாங்கம் தயங்காது.”
“தங்கள் அதிகாரத்துக்காக, ஒரு குடும்பத்தின் மற்றும் தங்கள் அரசியல் முகாமின் அதிகாரத்துக்காகச் செய்யப்பட்ட குற்றங்களான தாஜுதீன் விவகாரமும் அப்படித்தான், ஈஸ்டர் தாக்குதலும் அப்படித்தான்… இவற்றின் பின்னணியில் மிகச் சிறிய அரச இயந்திரத்தின் இயக்குநர்கள் இருந்தனர்.
இதனை நாட்டுக்கு வெளிப்படுத்தக் கூடாதா? நாட்டில் வெள்ளை வென் பயம் இருக்கவில்லையா? இலக்கத் தகடுகள் இல்லாத வெள்ளை வென்களில் வந்து, தங்கள் காணியில் வீட்டை உடைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மனிதர்களைக் கடத்தினார்கள். இவை சிவில் மோதல்கள் அல்ல.
ஒரு சிறிய குழுவினர் தங்களின் அரசியல் தேவைக்காகப் பயன்படுத்தப்பட்டு இக்கொடூரக் கொலைகள் செய்யப்பட்டுள்ளன. இந்த காட்டுமிராண்டித்தனமான குற்றங்களுக்கு எதிராகச் சட்டத்தை நடைமுறைப்படுத்த நாம் நிச்சயமாகக் கடமைப்பட்டுள்ளோம்.” – என்றார்.
