ஜூலை 11ஆம் திகதி நடைபெறும் ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலையொட்டி சிங்கப்பூரில் வசிக்கும் மலேசியர்கள் வாக்களிக்க வசதியாக சிறப்பு ஏற்பாடுகளை மலேசிய அரசாங்கம் செய்துள்ளது.
ஜொகூர்–சிங்கப்பூர் எல்லைச் சோதனைச் சாவடிகளில் ஏற்படக்கூடிய நெரிசலைச் சமாளிக்கச் சிறப்புப் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசூத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
புதிய குடிநுழைவு முறையை அமல்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதால், எல்லைச் சோதனைச் சாவடிகளில் அவ்வப்போது சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அவர் கூறினார்.
ஆனால், வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் எந்த இடையூறும் ஏற்படாமல் இருப்பதே முக்கிய நோக்கம் என்று அவர் வலியுறுத்தினார்.
ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் சமாளிக்க மாற்றுத் திட்டங்களும் தயாராக உள்ளன என்றார் அவர். ஆனால், அந்தத் திட்டங்களின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
சிங்கப்பூரில் வசிக்கும் மலேசிய வாக்காளர்கள் எளிதாக நாடு திரும்புவதற்காகக் குடிநுழைவு, சோதனைச் சாவடிகளில் தனி வழித்தடங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
