ஜோகூர் மாநிலத் தேர்தல்: 172 வேட்பாளர்கள் களத்தில்; மூன்று தொகுதிகளில் ஐந்து முனைப் போட்டி

மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தின் 16ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 56 வேட்புமனுத் தாக்கல் மையங்களில் அமைதியான முறையில் நிறைவடைந்தது.

காலை 10.00 மணியுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மொத்தம் 172 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாக மலேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எந்தவொரு வேட்புமனுவும் நிராகரிக்கப்படவில்லை.

கட்சிவாரியாக பாரிசான் நேஷனல் 56 தொகுதிகளிலும், பக்காத்தான் ஹராப்பான் 56 தொகுதிகளிலும், பெரிக்காத்தான் நேஷனல் 33 தொகுதிகளிலும், பெர்சாமா கட்சி 15 தொகுதிகளிலும், மூடா 4 தொகுதிகளிலும், பார்ட்டி ஒராங் அஸ்லி மலேசியா (ASLI) ஒரு தொகுதியிலும், பார்ட்டி சோசலிஸ் மலேசியா (PSM) ஒரு தொகுதியிலும், சுயேட்சை வேட்பாளர்கள் ஆறு தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர்.

56 சட்டமன்றத் தொகுதிகளில் 14 தொகுதிகளில் நேரடி இருமுனைப் போட்டியும், 27 தொகுதிகளில் மும்முனைப் போட்டியும், 12 தொகுதிகளில் நான்கு முனைப் போட்டியும், மூன்று தொகுதிகளில் ஐந்து முனைப் போட்டியும் நிலவுகிறது. ஐந்து முனைப் போட்டி நடைபெறும் தொகுதிகளாக என்14 புக்கிட் நானிங், என்41 புதேரி வாங்சா மற்றும் என்51 புக்கிட் பத்து ஆகியவை உள்ளன.

போட்டியிடும் 172 வேட்பாளர்களில் 138 பேர் ஆண்களும், 34 பேர் பெண்களுமாவர். வயது அடிப்படையில் 21 முதல் 29 வயதுக்குள் 9 பேர், 30 முதல் 39 வயதுக்குள் 38 பேர், 40 முதல் 49 வயதுக்குள் 50 பேர், 50 முதல் 59 வயதுக்குள் 48 பேர், 60 வயதுக்கு மேற்பட்ட 27 பேரும் களமிறங்கியுள்ளனர். 73 வயதுடைய ஸ்தூலாங் தொகுதியின் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் வயதில் மூத்தவராகவும், ஜோகூர் லாமா தொகுதியின் 23 வயதுடைய பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் வயதில் இளையவராகவும் உள்ளனர்.

வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் பிரச்சார காலம் இன்று முதல் ஜூலை 10 ஆம் தேதி இரவு 11.59 மணி வரை அமலில் இருக்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை கண்காணிக்க மாநிலம் முழுவதும் 56 தேர்தல் பிரச்சார அமலாக்கக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும், தேர்தல் காலத்தில் சட்டங்களையும் விதிமுறைகளையும் முழுமையாகக் கடைப்பிடித்து அமைதியான சூழலில் பிரச்சாரம் மேற்கொள்ள அனைத்து தரப்பினரையும் தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles