வடக்கு ஜேர்மனியின் ஸ்டேட் நகரில் உள்ள இளைஞர் நல மையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஐவர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
இன்று திங்கட்கிழமை நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தையடுத்து இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியவராக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
எனினும், இந்தத் தாக்குதலுக்கான பின்னணிக் காரணம் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.
இளைஞர் நல மையக் கட்டிடம் ஒன்றில் பலரைக் குறிவைத்து இந்தக்கொலைச் சம்பவம் நடந்துள்ளது. இதில் ஐந்து பேர் பாரதூரமான காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர், மேலும் சிலர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஸ்டேட் நகர மையத்திற்குத் தெற்கே உள்ள டான்கர்ஸ்ஸ்ட்ராஸ் வீதியில் பெருமளவிலான பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பொதுமக்கள் அந்தப் பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும், அவசரக்கால மீட்புப் படையினரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
