அருணாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பல்வேறு கிராமங்கள் துண்டிக்கப்பட்டு 3,000 இற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அருணாச்சலப் பிரதேசத்தின் லோயர் சியாங் மாவட்டம் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள நெல் வயல்கள், வீடுகள் உள்ளிட்ட தனியார் சொத்துக்கள், பாலங்கள், சாலைகள் ஆகியவை கடுமையாக சேதமடைந்துள்ளதாக மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி ஆகஸ்டி ஜமோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “லோயர் சியாங் மாவட்டம் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள டபிர்போ சாகு, லோக்லு, ரோட்டே, ராமே, கோயு உள்ளிட்ட கிராமங்களில் சாலைத் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
சுமார் 500 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. எனினும், இதுவரை உயிரிழப்போ, காயங்களோ இதுவரை பதிவாகவில்லை. ராணுவம், இந்தோ – திபெத் எல்லை போலீஸ், இந்திய ராணுவத்தின் எல்லை சாலை அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் மீட்புப் பணிகளைத் தொடங்கி உள்ளது. சாலைத் தொடர்பை மீட்டெடுக்க போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட ரோட்டே கிராமத்தைச் சேர்ந்தவரும், குருங் குமே மாவட்டத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியுமான டேவிட் கோயு, “இங்கு பெரும் பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. இதனால், உள்ளூர் மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். நெல் வயல்கள், தோட்டங்கள் உள்ளிட்ட விவசாய நிலங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
வளர்ப்புப் பிராணிகளான ஆடுகள், மாடுகள், பன்றிகள், கோழிகள் உள்ளிட்ட கால்நடைகளையும், வளர்ப்புப் பறவைகளையும் ம க்கள் இழந்துள்ளனர். கிராம மக்கள் பலரும் வெளியே செல்ல முடியாமல் சிக்கி உள்ளனர்.
கிராமத்தின் தொங்கு பாலம் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. அணுகு சாலைகள், சிறு பாலங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. ரோட்டே கிராமம் வெளியுலகத் தொடர்பின்றி முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. கிராமத்தின் குடிநீர் விநியோக அமைப்பு முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மின் கம்பங்கள், மின் இணைப்புகள் ஆகியவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. – என தெரிவித்தார்.
