கடவுச்சொற்களை வழங்குமாறு சுரேஷ் சலேக்கு நீதிமன்றம் உத்தரவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, தனது தொலைபேசி மற்றும் கணினியின் கடவுச்சொற்களை குற்றப் புலனாய்வுத் துறைக்கு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பிரதிவாதி தரப்பால் முன்னர் செய்யப்பட்ட மனுக்கள் மீதும் நீதிவான் இன்று உத்தரவுகளை வழங்கினார்.

குற்றப் புலனாய்வுத்துறையின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவை இந்த விசாரணையில் இருந்து நீக்குமாறு, சுரேஷ் சாலே தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை நீதிவான் நிராகரித்துள்ளார்.

அத்துடன், சந்தேக நபரான சுரேஷ் சலே காவலில் இருக்கும்போது, ​​சட்ட நடவடிக்கைகளுக்குத் தேவையான நாளிதழ்கள், எழுத்துப்பூர்வமான பொருட்கள் மற்றும் சட்ட விதிகளை வழங்க அனுமதி கோரி சமர்ப்பிக்கப்பட்ட மனுவையும், நீதிவான் நிராகரித்தார்.

மேலும், குற்ற ஒப்புதல் வாக்குமூலமாக அமையாத ஒரு வாக்குமூலத்தை, நீதிவான் முன்பாக அளிக்க அனுமதிக்குமாறு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 127-வது பிரிவின் கீழ் விடுத்த கோரிக்கையையும் நீதிவான் நிராகரித்தார்; அத்தகைய வாக்குமூலம் நடைபெற்று வரும் புலனாய்வுகளில் தலையிடக் கூடும் என்றும் நீதிவான் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், முதல் மற்றும் இரண்டாம் சந்தேக நபர்களுக்கு எதிராக, மேலதிக ஆதாரங்கள் எதுவும் இல்லை என்ற அடிப்படையில், அவர்களை விடுவிக்கக் கோரிய மனுவையும் நீதிவான் நிராகரித்தார்.

மூன்றாம் சந்தேக நபரான சுரேஷ் சாலேவைப் பொறுத்தவரை, அவரை நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக நேரில் முன்னிலைப்படுத்த வேண்டாம் என்ற கோரிக்கையை நீதிவான் அனுமதித்தார்.

மேலும், எதிர்கால நீதிமன்ற நாள்களில் அவரை மெய்நிகர் தொழில்நுட்பத்தின் மூலம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவும் உத்தரவிட்டார்.

மூன்றாம் சந்தேக நபரை சட்டப்பூர்வமாக அணுகுவதற்கு நீதித்துறை மேற்பார்வை கோரிய கோரிக்கையையும் நீதிவான் நிராகரித்தார்.

இந்த வழக்கின் அடுத்த விசாரணையை எதிர்வரும் செப்ரெம்பர் 2 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கவும் நீதிவான் கட்டளையிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles