குஜராத் மாநிலத்தின் பாவ்நகர் மாவட்டம் கராஜியா கிராமத்துக்குள் சிங்கம் ஒன்று நேற்று புகுந்தது. அது ஒரு பசு மாட்டு கூடாரத்தின் அருகே பதுங்கியிருந்தது.
அப்போது பசுக்களுக்கு தீவனம் போடச் சென்ற உரிமையாளர் பார்மர் மீது சிங்கம் பாய்ந்து அவர் தப்ப முடியாமல் கால்களால் அழுத்தி பிடிக்குள் வைத்திருந்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிங்கத்தை விரட்ட முயன்றனர். ஆனால், அவரின் கை சிங்கத்தின் வாயிலும், அவரது கால் சிங்கத்தின் கால்களுக்குள்ளும் சிக்கியிருந்தது.
அருகில் இருந்தவர்கள் தொலைவில் இருந்தபடியே கூச்சல் எழுப்பியும், சிங்கத்தின் மீது கற்களை எறிந்தும் தாக்குதல் நடத்தினர். இதனால் சிங்கம் இவரை இழுத்துச் செல்லாமல் அரை மணி நேரம் அந்த இடத்திலேயே அமர்ந்திருந்தது. ஒரு கட்டத்தில் கூட்டம் அதிகமானவுடன் அவரை விட்டு விட்டு அருகில் இருந்த பசு மாட்டை நோக்கி சிங்கம் சென்றது. சிங்கம் பார்மரை ஆக்ரோஷமாக கடிக்காமல் தனது பிடிக்குள் மட்டும் வைத்திருந்ததால் அவர் உயிர் தப்பினார்.
அதற்குள் கிராமத்தினர் பார்மரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாக பரவியது. இச்சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
