மலாக்கா நீரிணையைப் பாதுகாப்பாக வைத்திருக்க சிங்கப்பூரும் இந்தோனேஷியாவும் உறுதி

மலாக்கா நீரிணையை அனைவருக்கும் அணுகக்கூடியதாகவும் திறந்தவெளிப் பாதையாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்கச் சிங்கப்பூரும் இந்தோனேஷிவும் உறுதிபூண்டுள்ளன.

இருதரப்பும் கடல்துறைப் பாதுகாப்பிற்கு முதலிடம் அளிப்பதை இது காட்டுகிறது. வட்டார நிலைத்தன்மைக்கும் பொருளியல் வளர்ச்சிக்கும் இருதரப்பு உறவு முக்கியம் என்று அவை கருதுகின்றன.

ஜகார்த்தாவில் நடைபெற்ற தலைவர்கள் ஓய்வுத்தளச் சந்திப்பில் சிங்கப்பூர்ப் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவும் அந்த உறுதிமொழியைத் தெரிவித்தனர்.

வர்த்தகம், முதலீட்டுக்கு அப்பாலும் பல்வேறு புதிய துறைகளில் இருதரப்பு உறவு வலுப்பெறுவதைப் பேச்சு கோடிகாட்டியது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்சார்ந்த வர்த்தகம், மின்னிலக்க உள்கட்டமைப்பு, விநியோக நடவடிக்கைகளில் மீள்திறன் முதலியவை அந்தத் துறைகளில் அடங்கும்.

சிங்கப்பூருக்கும் இந்தோனேஷியாவுக்கும் இடையில் அரசதந்திர உறவுகள் தொடங்கி 2027உடன் 60 ஆண்டுகள் நிறைவடையும். அதை அனுசரிக்க இரு நாடுகளும் ஆயத்தமாகி வருகின்றன. இந்நிலையில் இருதரப்பும் அவற்றின் பொருளியல், அரசதந்திர நலன்களை மேலும் அணுக்கமான முறையில் தொடர்புபடுத்தப் பெருமுயற்சி எடுப்பதைப் பேச்சுகள் பிரதிபலித்தன.

மலாக்கா நீரிணை, இந்தியப் பெருங்கடலையும் தென்சீனக் கடலையும் இணைக்கிறது. உலகளாவிய வர்த்தகத்திலும் எரிசக்தி ஏற்றுமதியிலும் அதன் பங்கு கணிசமானது. உலகின் மிக முக்கிய கடல்சார் வழித்தடங்களில் இதுவும் ஒன்று.

இந்த நீர்வழித்தடம் குறித்து இந்தோனீசியாவும் சிங்கப்பூரும் தங்களின் பொதுவான நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக அதிபர் பிரபோவோ தெரிவித்தார்.

இந்தோனேஷியாவும் சிங்கப்பூரும் மலாக்கா நீரிணையில் நேரடியாக எல்லைகளைப் பகிர்ந்துகொள்ளும் நாடுகள். மலாக்கா நீரிணையை அனைத்துத் தரப்பினருக்கும் சுதந்திரமான ஒரு பாதையாகப் பராமரிப்பதில் எங்களுக்குப் பொதுவான ஆர்வம் உள்ளது – என்றார் அவர்.

பிரதமர் வோங்குடன் கலந்துகொண்ட கூட்டுச் செய்தியாளர் கூட்டத்தில் திரு பிரபோவோ அந்தக் கருத்துகளை முன்வைத்தார்.

நீரிணையில் பாதுகாப்பையும் அமைதியையும் பேண வேண்டும். மேலும் மாசு, விபத்துகள், கொள்ளை, கடற்கொள்ளையர்களிடமிருந்து இதனைப் பாதுகாக்க வேண்டும், என்றும் அவர் கூறினார்.

பிரதமர் வோங்கும் இதேபோன்ற கருத்தை வெளிப்படுத்தினார். கடல்சார் பாதுகாப்பைப் பரந்துபட்ட உலகளாவிய நிலவரங்களுடன் அவர் இணைத்துப் பேசினார்.

மத்திய கிழக்கில் அண்மையில் நடந்த நிகழ்வுகள், முக்கிய வர்த்தகப் பாதைகளைப் பாதுகாப்பாகவும் செயல்படும் விதத்திலும் வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியிருப்பதாகத் திரு வோங் சொன்னார்.

கப்பல் போக்குவரத்து உரிமைகளையும் சுதந்திரமாகச் செயல்படுவதையும் நிலைநிறுத்துவதிலும் கடல்சார் தொடர்புப் பாதைகளை அனைவருக்கும் திறந்துவைப்பதிலும் நாங்கள் ஒரே மாதிரியான ஆர்வத்தைக் கொண்டுள்ளோம், – என்று பிரதமர் வோங் குறிப்பிட்டார்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles