சீனாவில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கின் காரணமாக இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
அத்துடன், கனமழை மற்றும் புயல் காரணமாக 20இற்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்துள்ளதுடன், சுமார் 4,800 வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன.
இதேவேளை, சீனாவின் 62க்கும் மேற்பட்ட முக்கிய நதிகளில் வெள்ள நீர் அபாயக் கட்டத்தைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கின்றது.
இதுவரை 54 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த கன மழையினால் கடுமையான சேதமடைந்த ஒரு பூங்காவிலிருந்து சுமார் 900 பாம்புகள் தப்பி ஓடியுள்ளதாகவும், இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், தப்பிய பாம்புகளில் பெரும்பாலானவை விஷமற்றவை என்று கூறப்பட்டாலும், அவற்றை உடனடியாகப் பிடிப்பதற்காகச் சிறப்பு மீட்புப் படைகள் களமிறக்கப்பட்டுள்ளன.
இது குறித்து சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தீவிரமாக செயற்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன்,காயமடைந்தவர்களுக்குத் தடையின்றி மருத்துவச் சிகிச்சை கிடைப்பதையும், மக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதையும் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
தற்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் மிகத் தீவிரமாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
