யாழ்ப்பாணம் – காக்கைதீவு திண்மக்கழிவு மீள்சுழற்சி மையத்தின் செயற்பாடுகளால் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் தீவிரமடைந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டிய அப்பகுதி மக்கள், நிரந்தரத் தீர்வு கோரி இன்று யாழ்ப்பாண மாநகர சபை முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜே-88, ஜே-85 மற்றும் நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட ஆறுகால்மடம் பழம் வீதி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
யாழ்ப்பாண மாநகர சபையினால் திண்மக்கழிவுகளைத் தரம் பிரித்து, மீள்சுழற்சி செய்து சேதனப் பசளையாக மாற்றும் நோக்கில் காக்கைதீவு மீள்சுழற்சி மையம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
எனினும், மீள்சுழற்சிக்காகக் கொண்டுவரப்படும் கழிவுகள் பல நாட்களாகக் குவிந்து கிடப்பதால் அவை அழுகி கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், கழிவுநீர் வடிந்து சுற்றுப்புறச் சூழலையும் குடியிருப்புகளையும் பாதிப்பதாக மக்கள் தெரிவித்தனர்.
இதன் காரணமாக ஈக்களின் பெருக்கம் அதிகரித்துள்ளதுடன், வயிற்றோட்டம், வாந்திபேதி, சொறி, சிரங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவி வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
மேலும், கழிவுகள் முறையாகத் தரம்பிரிக்கப்படாததுடன், திறந்தவெளியில் எரிக்கப்படுவதால் பரவும் புகை காரணமாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சுவாசக் கோளாறுகள் மற்றும் பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தனர்.
முன்னர் இம்மையத்தில் தரமான கழிவு முகாமைத்துவம் மேற்கொள்ளப்பட்டதோடு, கழிவுகளிலிருந்து சேதனப் பசளை தயாரித்து விற்பனை செய்யப்பட்டதாகவும், தற்போது அந்த நடைமுறைகள் முற்றாகக் கைவிடப்பட்டுள்ளதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர்.
இந்த நிலைக்கு யாழ்ப்பாண மாநகர சபையின் நிர்வாக அலட்சியமே காரணம் எனத் தெரிவித்த மக்கள், மாநகர முதல்வரும் மாநகர ஆணையாளரும் நேரில் வந்து நிரந்தரத் தீர்வை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், தமது போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
