இந்திய நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயன்ற நூற்றுக்கணக்கான கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டக்காரர்களை கலைக்க டெல்லி காவல்துறை தடியடி நடத்தியது.
நீட் உள்ளிட்ட தேர்வுகளில் நடந்த முறைகேடுகள், வினாத்தாள் கசிவு ஆகியவற்றுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் இன்று நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, இன்று திங்கட்கிழமை ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்ற நூற்றுக்கணக்கான கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டக்காரர்களை கலைக்க டெல்லி பொலிஸார் தடியடி நடத்தினர். இந்தப் போராட்டத்தால் புது டெல்லியின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
புது டெல்லியில் போராட்ட அறிவிப்பு காரணமாக, கூட்டத்தைக் கட்டுப்படுத்த பெருமளவிலான பாதுகாப்புப் படையினர் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். மேலும், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்ட அறிவிப்பால் ஜந்தர் மந்தர், நாடாளுமன்ற வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டது.
போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தும் காணொளியைப் பகிர்ந்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
“பிரதமர் மோடி, உங்கள் காவல்துறையினரை விலகிச் செல்லுமாறு கூறுங்கள். நீங்கள் மறந்துவிட்டிருந்தால் சொல்கிறோம், நாம் ஒரு ஜனநாயக நாடு. ஜனநாயக மற்றும் அமைதியான போராட்டத்தை நீங்கள் நசுக்க முயற்சிப்பதை உலகம் முழுவதும் உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது.” எனத் தெரிவித்துள்ளது.
