மலேசியாவின் பண்டார் மக்கோத்தா செராஸ் பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, காஜாங் மாவட்ட பொலிஸார் கொலை வழக்கைப் பதிவு செய்து தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இன்று காலை 8:40 மணியளவில் அப்பகுதியில் நபர் ஒருவர் சுயநினைவின்றி விழுந்து கிடப்பதாகப் பொதுமக்களிடம் இருந்து அவசர அழைப்பு வந்ததாகக் காஜாங் மாவட்ட பொலிஸார் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், இரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த இளைஞர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர். உயிரிழந்தவரிடம் எவ்வித அடையாள ஆவணங்களும் கண்டெடுக்கப்படவில்லை.
தடயவியல் பிரிவினர் நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனையில், கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட காயங்கள் சடலத்தில் கண்டறியப்பட்டுள்ளன.
காஜாங் மருத்துவமனையில் நடத்தப்பட்ட உடற்கூறாய்வு முடிவில், வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட கத்திக்குத்து காயங்களால் கடுமையான இரத்தப்போக்கு ஏற்பட்டு அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தை அடுத்து கொலையாளிகள் மற்றும் சாட்சிகளை தேடவும் பொலிஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
