டில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஜூலை 21) கைது செய்யப்பட்டார்.
பிரதமர் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அவரின் இல்லத்தை முற்றுகையிடும் வகையில் பேரணி செல்ல முயன்றதால் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தி, சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரையும் கைது செய்து தனித்தனி வாகனத்தில் பொலிஸார் அழைத்துச் சென்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பதவி விலகக் கோரி தொண்டர்களுடன் இந்தியா கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலாளர்கள் பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால், கேரள முதல்வர் வி.டி. சதீசன், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ராஜாஜி மார்க் பகுதியில் இருந்து லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் மோடியின் வீடு வரை பேரணியாகச் சென்ற அவர்கள், மோடியின் வீட்டின் முன்பாக அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் தீவிரப்படுத்தும் வகையில், பிரதமர் மோடியின் இல்லத்தை முற்றுகையிடும் வகையில் பேரணியாகச் சென்றனர். அப்போது பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்து அழைத்துச் சென்றனர்.
முன்னதாக போராட்டத்தில் காயமடைந்த மாணவர்களை இன்று மருத்துவமனைக்கு நேரில் சென்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்தார். தொடர்ந்து, ஜந்தர் மந்தர் பகுதியில் போராடி வரும் இளைஞர்களுக்கு ஆதரவாக இன்று பேரணி நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
