மாகாணத் தேர்தலை நடத்துமாறு கொழும்பை வலியுறுத்துவோம் – இந்திய வெளியுறவுச் செயலர் தெரிவிப்பு

“இந்தியப் பங்களிப்போடு உருவாக்கப்பட்ட அதிகாரப் பரவலாக்கல் அலகான மாகாண சபைகளை இயங்கக்கூடிய விதத்தில் அதற்கான தேர்தல்களை விரைவில் நடத்துமாறு கொழும்பு அரசை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தும்.”

– இவ்வாறு இன்று பிற்பகல் தன்னைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களிடம் இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

தமிழர் தாயகப் பிரதேசத்தில் இன்னமும் கைவிடப்படாமல் படையினரின் ஆக்கிரமிப்பில் இருக்கும் நிலங்கள் பற்றிய விவரங்களை அவர் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களிடம் கேட்டறிந்து கொண்டார்.

இன்று பிற்பகல் 2 மணி முதல் சுமார் ஒரு மணி நேரம் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் அதன் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சாணக்கியன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான மருத்துவர் ப.சத்தியலிங்கம், கவீந்திரன் கோடீஸ்வரன் ஆகியோர் பங்குபற்றினர்.

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பியும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும் பங்குபற்றினர்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து இந்திய வெளியுறவுச் செயலாளர் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களிடம் கேட்டறிந்து கொண்டார்.

தேர்தலை இப்போதைக்கு நடத்தும் எண்ணம் அரசுக்கோ அரசு தலைவருக்கோ இல்லை என்பதைத் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் எடுத்துரைத்தனர்.

இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள் மக்களால் கைவிடப்பட்டவை என்ற சாரப்பட கருத்துக் கூறப்படுவது குறித்து இந்திய வெளியுறவுச் செயலாளர் தமிழ்த் தலைவர்களிடம் கேட்டார்.

“ஜனாதிபதியினாலும் பிற தென்னிலங்கைத் தலைவர்களாலும் அத்தகைய கருத்து கூறப்படுவதாக அறிகின்றோம். ஆனால் அது தப்பு. சம்பந்தப்பட்ட காணிகளை இராணுவம் ஆக்கிரமித்து நீண்ட காலமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் அந்த மக்கள் வேறு இடமில்லாமல் இடம்பெயர்ந்து இருக்கின்றார்கள். சில சமயங்களில் வெளிநாட்டில் இருக்கின்றார்கள். அதன் காரணமாக அவை கைவிடப்பட்ட காணிகள் என்று கூறுவது அர்த்தமற்றது.” – என்று தமிழ்த் தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.

மக்கள் குடியிருக்காத தமிழர் தாயக நிலங்களைக் கபளீகரம் செய்ய கொழும்பு ஆட்சிப்பீடம் முனைகின்றது என்று சுட்டிக் காட்டிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி., ஏற்கனவே அரசு அப்படி ஒரு முயற்சியை எடுத்தது, அதை மேற்கொள்ள மாட்டோம் என்று பிரதமர் கூட எமக்கு வாக்குறுதி தந்தார், ஆனால் அதையும் மீறி அப்படி நிலத்தை சுவீகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது, சந்தர்ப்பவசமாக சுமந்திரன் வழக்குப் போட்டு அந்த முயற்சியை முறியடித்தார் என்று மேலும் சுட்டிக்காட்டினார்.

“மக்களின் காணிகளை அவர்களிடமே விடுவிக்க வேண்டும் என்பது தங்களுடைய அரசின் தேசிய கொள்கை என்று அறிவிக்கின்றார் ஜனாதிபதி. ஆனால் மறுநாள் சாணக்கியன் நாடாளுமன்றத்தில் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அந்தக் காணிகளை விடுவிக்க மாட்டோம் என்று பிரகடனப்படுத்துகின்றார்.” – என்று சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

இன்றைய கூட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சாணக்கியன் போன்றோரும் கருத்துக்களை வெளியிட்டனர்.

கொழும்புக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜாவும் இந்தச் சந்திப்பில் பங்குபற்றினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles