ரஷ்யாவுக்காக உக்ரைன் ராணுவத்தில் இணைந்த ஆஸ்திரேலியர் கைது!

உக்ரைன் ராணுவத்தில் இணைந்து, அந்நாட்டு ராணுவத்தின் இரகசியத் தகவல்களை ரஷ்ய உளவு முகவர்களுக்கு வழங்க முயன்றார் எனக் கூறப்படும் நபரை ஆஸ்திரேலியக் கூட்டாட்சி காவல்துறை (AFP) கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளது.

ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியக் குடியுரிமை கொண்ட 27 வயதான விளாடிமிர் டெஸ்லோவ் என்பவர் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவர் மீது ‘வெளிநாட்டு தலையீட்டு முயற்சி’ (Attempted foreign interference) குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டிற்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

டெஸ்லோவ் ஒக்ரோபர் 2024இல் ரஷ்யாவிற்குச் சென்று ராணுவப் பயிற்சி பெற்றதாகக் காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது. பின்னர் ஆஸ்திரேலியா திரும்பிய அவர், ரஷ்ய உளவுத்துறையுடன் தொடர்புடையவர்கள் எனத் தான் நம்பிய நபர்களுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

கடந்த ஆண்டு மே மாதம் உக்ரைன் சென்ற டெஸ்லோவ், அந்நாட்டு இராணுவத்தில் இணைந்துள்ளார்.

அங்கு பணியாற்றிய காலத்தில், உக்ரைன் ராணுவ வீரர்கள், படைப்பிரிவுகள் மற்றும் அவர்களின் இருப்பிடங்கள் தொடர்பான முக்கியத் தகவல்களைச் சேகரித்துள்ளார்.

இந்தத் தகவல்களை அவர் பகிர முயன்றது உக்ரைன் ராணுவ வீரர்களின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட டெஸ்லோவிடம் இருந்து பல மின்னணு சாதனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

‘ஆப்பரேஷன் வூட்கிரீப்பர்’ (Operation Woodcreeper) என்ற பெயரில் ஜூன் மாதம் முதல் இந்த இரகசிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஆஸ்திரேலியக் கூட்டாட்சி காவல்துறையின் ஆணையர் கிறிஸி பாரெட் கூறுகையில், “இந்த நபரால் ஆஸ்திரேலியாவிற்கு நேரடிப் பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லை. எனினும், வெளிநாட்டுத் தலையீடுகளுக்கு ஆஸ்திரேலியா ஒரு பாதுகாப்பான புகலிடமாக மாறுவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என்று உறுதியாகத் தெரிவித்தார்.

பிரிஸ்பேன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட டெஸ்லோவிற்குப் பிணை மறுக்கப்பட்டு, வழக்கு விசாரணை ஒக்ரோபர் 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக ஆஸ்திரேலியாவிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை என கான்பெர்ராவில் உள்ள ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles