கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில், குதிரை வண்டிகளும் முதல் தலைமுறை கார்களும் இயங்கிய 1919 ஆம் ஆண்டில் பிறந்த ஆக்னஸ் மர்பி, தற்போது தனது 107ஆவது பிறந்தநாளைக் கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.
ஒவ்வொரு வருடமும் என் வயதை நான் மறந்துவிடுகிறேன், ஆனால் அதற்குள் அடுத்த பிறந்தநாள் வந்துவிடுகிறது” எனப் புன்னகையுடன் அவர் கூறுகின்றார்.
ஷைலோ பாப்டிஸ்ட் தேவாலயத்திற்கு சொகுசு காரில் வருகை தந்த ஆக்னஸுக்கு, அவரது குடும்பத்தினர் சர்ப்ரைஸ் விருந்து வைத்து அசத்தியுள்ளனர்.
எங்கள் குடும்பத்தின் ‘காட்ஃபாதர்’ இவர்தான்! வீட்டிற்குள் யார் வந்தாலும் இவரைச் சந்தித்து ஆசி பெற்ற பிறகே மற்ற வேலைகளைப் பார்ப்பார்கள் என ஆக்னஸின் பேரன் ரீகன் டோலன் நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.
107 ஆண்டுகால நீண்ட வாழ்க்கையில் ஆக்னஸ் கடந்த வந்த பாதையும், அவர் சந்தித்த சவால்களும் ஏராளம். இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே இவரது முதல் கணவர் உயிரிழந்தார். ஒரு கருப்பினப் பெண்ணாக அக்காலத்தில் அவர் சந்தித்த தீவிர இனப்பாகுபாடுகளையும் சவால்களையும் அமைதியான மனஉறுதியுடன் எதிர்கொண்டு வென்றுள்ளார்.
30 ஆண்டுகளுக்கு முன்பு தத்தெடுக்கப்பட்ட பேரன் ரீகனை, முதல் நாளில் இருந்தே தன் சொந்தப் பேரனாக ஏற்றுக்கொண்டு அரவணைத்துள்ளார். இந்தச் சிறப்புமிக்க பிறந்தநாள் விழாவிற்கு கனடியன் டயர் மற்றும் ராயல் கனடியன் லீஜியன் உள்ளிட்ட நிறுவனங்கள் சிறப்புப் பரிசுகளை வழங்கி கௌரவித்தன.
மேலும், தனது பாட்டியின் வாழ்க்கை வரலாற்றைப் போற்றும் வகையில் அவரது பேரன் ரீகன் ஒரு பிரத்யேக இணையதளத்தையும் உருவாக்கியுள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள மக்கள் அதில் ஆக்னஸுக்குத் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வாழ்த்துச் செய்திகளைப் படித்து மகிழ்வதுதான் இந்த 107 வயது பாட்டிக்கு தற்போதைய பிடித்தமான பொழுதுபோக்கு என குறிப்பிட்டுள்ளார்.
