காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு எங்கள் ஆட்சியில் கட்டாயம் நீதி கிடைக்கும்!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி வடக்கு – கிழக்கு உறவுகள் நடத்திய போராட்டத்தையும் மாநாட்டையும் தாம் முழுமையாக மதிப்பதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களின் நீண்டகால வேதனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமது அரசு செயற்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு எமது ஆட்சியில் கட்டாயம் நீதியைப் பெற்றுக்கொடுப்போம். இத்தகைய கொடூரச் செயல்களுடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் உரிய முறையில் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்குத் தகுந்த தண்டனை சட்டத்தின் மூலம் வழங்கியே தீருவோம்.” – என்றார்.

வடக்கு – கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் “நீதிக்கான நீள் பயணம்” எனும் மாபெரும் சர்வதேச மாநாடு நேற்று மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்ற இம்மாநாட்டில் சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய பிராந்திய இயக்குநர் ஸ்மிருதி சிங் மற்றும் ஐ.நா. நிபுணர் அனா லொரேனா டெல்கடில்லோ பெரெஸ் உள்ளிட்ட சர்வதேசப் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

மாநாட்டுக்கு முன்னதாக, உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை நினைவுத் தூபியில் அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அங்கிருந்து பேரணியாகத் தந்தை செல்வா கலையரங்கைச் சென்றடைந்த பின்னரே மாநாடு ஆரம்பமானது.

குறிப்பாக, மாநாட்டு மண்டபத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பயன்பாட்டுப் பொருள்கள் மற்றும் அவர்கள் விரும்பிச் சேகரித்த நினைவுப் பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை அனைவரையும் உணர்ச்சிவசப்பட வைத்தது.

இத்தகைய சர்வதேச அளவிலான கவனவீர்ப்புகளும் போராட்டங்களும் தொடரும் சூழலில், அரசு மேற்படி உறுதிமொழியை வழங்கியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles