தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் தமிழ்மொழி மூலம் யாழ். மல்லாகம் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ்ட வித்தியாலய மாணவன் சு.சபின் 188 புள்ளிகளைப்பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.
2026ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின்படி, அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம், 188 புள்ளி என்ற அதிகூடிய புள்ளிகளை பெற்ற மாணவர் யாழ்ப்பாண மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சிங்கள மொழி மூலம், 193 புள்ளி என்ற அதிகூடிய புள்ளிகளை பெற்ற மாணவர் குருநாகல் பிரதேசத்தில் பதிவாகியுள்ளார்.
இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பாக இன்று (02) பிற்பகல் பரீட்சைகள் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், இம்முறை வெட்டுப்புள்ளி 139 என்றும் பெறுபேறுகளின்படி, 56,000 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு விட அதிக புள்ளிகளை பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஓகஸ்ட் 9ஆம் திகதி நடைபெற்ற இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்காக 294,132 மாணவர்கள் விண்ணப்பித்திருந்ததாகவும் அவர்களில் 289,867 மாணவர்கள் மாத்திரமே பரீட்சைக்குத் தோற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கு விண்ணப்பிக்க வேண்டிய திகதி தொடர்பில் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
