சிங்கப்பூரின் தேசிய விமான நிறுவனமான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) உலகின் சிறந்த விமான நிறுவனம் என்ற பட்டத்தை வென்றிருக்கிறது.
24 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் பங்கேற்ற 2026ஆம் ஆண்டிற்கான அனைத்துலகக் கருத்துக் கணிப்பில் அது முதலிடம் பிடித்தது
முந்திய 2025ஆம் ஆண்டில் முதலாவதாக வந்த கத்தார் ஏர்வேஸ் இம்முறை இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டது.
கொங்ஹொங்கின் ‘கத்தே பசிபிக் ஏர்வேஸ்’, ஜப்பானின் ‘ஏஎன்ஏ ஓல் நிப்பான் ஏர்வேஸ்’ ‘டர்க்கிஷ் ஏர்வேஸ்’ ஆகியவை முறையே மூன்று, நான்கு ஐந்தாம் இடங்களைப் பிடித்தன.
எஸ்ஐஏ நிறுவனம் 2025ஆம் ஆண்டிலும், 2024, 2022, 2021 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளிலும் கத்தார் ஏர்வேஸூக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்தது. மேலும் 2023, 2018, 2008, 2007 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் அது பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.
லண்டனைச் சேர்ந்த ‘ஸ்கைடிராக்ஸ்’ (Skytrax) ஆய்வு நிறுவனம் 2025 செப்ரெம்பர் முதல் 2026 ஓகஸ்ட் வரை இந்த ஆண்டுக்கான அனைத்துலகத் தரவரிசை ஆய்வை நடத்தியது. அதில் 100 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பயணிகள், 325க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்களை மதிப்பிட்டனர்.
எஸ்ஐஏயின் குறைந்த கட்டணத் துணை நிறுவனமான ஸ்கூட், தொடர்ந்து ஆறாவது ஆண்டாக உலகின் சிறந்த நீண்ட தூர, மலிவுக் கட்டண விமான நிறுவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
மேலும், ‘ஏர் ஏஷியா’ முதலிடம் பிடித்த உலகின் சிறந்த மலிவுக் கட்டண விமான நிறுவனம் பிரிவில் ஸ்கூட் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
