இலங்கைக்கு வெளியே, நாட்டின் கடற்பரப்புக்கு அப்பால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈரானிய எண்ணெய் கப்பல்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்குமாறு ஈரான் விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
இது குறித்து வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கூறுகையில் –
இலங்கையின் கடற்பரப்புக்கு அப்பால் தற்போது 47 வெளிநாட்டு கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 15 கப்பல்கள் ஈரானியவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த கப்பல்கள் வெற்று கச்சா எண்ணெய் கப்பல்கள் என்றும், அமெரிக்க தடைகள் காரணமாக அவை பல மாதங்களாக அப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கப்பல்கள் இலங்கையின் territorial waters-க்கு (இலங்கையின் பிராந்திய கடல் எல்லைக்கு ) வெளியே இருப்பதால், அவற்றுக்கு பொருட்கள் வழங்க வேண்டிய சட்டபூர்வ கடப்பாடு அரசாங்கத்திற்கு இல்லை.
அதேவேளை, உணவு, குடிநீர் உள்ளிட்ட பொருட்களை வழங்குவது பொதுவாக தனியார் நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் என்பதால், அத்தகைய சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் அமெரிக்காவின் Secondary Sanctions நடவடிக்கைக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாக அரசாங்கம் எச்சரித்துள்ளது.
அமெரிக்கத் தடைகளுக்கு உட்பட்ட ஈரானிய கப்பல்களுக்கு சேவை வழங்கினால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்களுடனான வர்த்தகத்தை இழக்கவும், அமெரிக்க வங்கி அமைப்பில் இருந்து விலக்கப்படவும் வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா இந்த கப்பல்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கு அதிகாரபூர்வமாக எந்த செய்தியையும் அனுப்பவில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் பயிற்சிகள்
இதற்கிடையில், இலங்கையின் அதிகாரிகளுக்கு கடல் வழி தடைகள் தவிர்ப்பு (maritime sanctions evasion) மற்றும் அணுசக்தி தொடர்பான கடத்தலை கண்டறிதல் குறித்து அமெரிக்க தூதரகம் பயிற்சிகளை நடத்தியுள்ளது.
கடந்த மாதம் 40 இற்கும் மேற்பட்ட இலங்கை அதிகாரிகள் தடைகளைத் தவிர்க்கும் கடல் நடவடிக்கைகளை கண்டறிவது தொடர்பான பயிற்சியில் பங்கேற்றனர்.
மேலும், கடந்த வாரம் இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு அணுசக்தி பொருட்கள் கடத்தலை கண்டறிந்து தடுப்பது தொடர்பாக ஐந்து நாள் பயிற்சி வழங்கப்பட்டதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
