பாகிஸ்தானில் பயணிகள் ரயில் தடம்புரண்டதில் 6 பேர் மரணம்!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பயணிகள் ரயில் இன்று செவ்வாய்க்கிழமை தடம் புரண்டதில் 6 பேர் பலியாகினர். மேலும் 30 பேர் காயமடைந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். கராச்சியிலிருந்து பெஷாவருக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​அதிகாலை சுமார் 5.15 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாகக் பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

முல்தானில் உள்ள ஷெர் ஷா பாலத்திற்கு அருகே ரெஹ்மான் பாபா எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக முல்தானில் உள்ள நிஷ்தார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அதேவேளையில் விபத்து நடந்த இடத்தில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு வருவதாக ஜியோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

விபத்தில் 6 பேர் பலியானதாகவும் சுமார் 30 பேர் காயமடைந்ததாகவும் பொலிஸா் தெரிவித்தனர். அந்த எக்ஸ்பிரஸ் ரயிலின் 14 பெட்டிகளும் பாலத்திற்கு அருகே தடம்புரண்டதாக மீட்புக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்து நடப்பதற்கு முன், ரோஹ்ரிக்கு அருகே ஒன்பதாவது பெட்டியின் நட்டுகள் மற்றும் போல்ட்டுகளைப் பணியாளர்கள் சரிசெய்ததாகப் பயணி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இச்சம்பவத்திற்கு பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மீட்புப் பணிகளை விரைவுபடுத்துமாறும், காயமடைந்தவர்களுக்குத் தாமதமின்றிச் சிறந்த மருத்துவச் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

ரயில் தடம் புரண்டதற்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. மீட்புப் பணிகள் தொடரும் நிலையில், பாகிஸ்தான் ரயில்வே மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடுதல் விவரங்களை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானின் பழுதடைந்த ரயில்வே கட்டமைப்பில் விபத்துகள் நிகழ்வது வழக்கமான ஒன்றாக உள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles