தென்கிழக்கு பிரான்ஸில் சீரற்ற வானிலை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுவரை 400 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதில் 75 வயது முதியவர் ஒருவர் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு, உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவருடைய சடலம் சான்-மித்ர்-லெ-ரம்பார் நகராட்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஹோட்-கோர்ஸ் (Haute-Corse) பகுதியில், கிசோனாச்சியா (Ghisonaccia) என்ற இடத்தில் ஒருவர் காணாமல் போயுள்ளார் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
நான்கு சக்கர வாகனத்தில் சென்ற இருவர், Fium orbu ஆற்றில் வாகனத்தோடு அடித்துச் செல்லப்பட்டனர் என கூறுப்படுகிறது.
குறித்த வாகனத்தில் இருவர் பயணித்த நிலையில் ஒருவர் ஜன்னல் வழியாக பாய்ந்து தப்பித்தார் எனவும் மற்றொருவர் காணாமல்போயுள்ளார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவரை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் மார்சேய் நகரத்திற்கு மேற்கே சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இஸ்த்ரே பகுதியில் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சீரற்ற வானிலை காரணமாக போக்குவரத்து தடைஏற்பட்டுள்ளதுடன் சில சாலைகள் மூடப்பட்டுள்ளன. அத்துடன் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
