மலேசியாவின் முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக், 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்தாத வரை சிறையிலேயே இருக்க வேண்டியிருக்கும் எனச் சட்டத்துறைத் தலைவர் தான் ஸ்ரீ முஹமட் டுசுக்கி மொக்தார் தெரிவித்துள்ளார்.
வீட்டுக் காவலில் எஞ்சிய சிறைத்தண்டனையை அனுபவிப்பதற்கான நிபந்தனையாக விதிக்கப்பட்ட அந்த அபராதத்தை நஜிப் இதுவரை செலுத்தவில்லை என அவர் கூறினார்.
இருப்பினும், அபராதத்தைச் செலுத்துவதற்குக் காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் அவர் விளக்கினார்.
கிளந்தான், கோத்தா பாருவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
முன்னதாக, 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்தினால், 2028-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க நஜீப்புக்கு மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் நிபந்தனையுடன் கூடிய பொது மன்னிப்பு வழங்கியிருந்தார்.
எனினும், அந்தத் தொகையைச் செலுத்தும் அளவுக்கு நஜீப்பிடம் நிதி வசதி இல்லை என அவரது வழக்கறிஞர் தான் ஸ்ரீ முஹமட் ஷாஃபி அப்துல்லா ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
