ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான தகவல்களை வழங்குபவர்களுக்கு 20 மில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான வெகுமதியும், தேவைப்பட்டால் பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயர்வதற்கான வாய்ப்பும் வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறையின் ‘நீதிக்கான வெகுமதிகள்’ (Rewards for Justice) திட்டத்தின் கீழ் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) தனது எக்ஸ் (X) தளத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்கர்களின் உயிர்களையும் பாதுகாப்பையும் அச்சுறுத்தும் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களைப் பெறும் நோக்கில், 1984ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு வெகுமதித் திட்டத்தின் கீழ் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது.
ஈரான் சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்கிச் செயற்படத் தவறியுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.
இதன் காரணமாக, ஈரானின் மையவிலக்கிகள் உள்ளிட்ட முக்கிய அணுசக்தி உபகரணங்களின் உற்பத்தி மற்றும் கையிருப்பு தொடர்பான தகவல்களைத் தொடர்ந்து கண்காணிப்பதில் சர்வதேச அணுசக்தி முகமைக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், எந்த வகையான தகவல்களை வழங்கினால் முழுமையான 20 மில்லியன் டொலர் வெகுமதி கிடைக்கும் என்பது தொடர்பான குறிப்பிட்ட நிபந்தனைகள் இதுவரை வெளியிடப்படவில்லை.
இதற்கிடையில், ஈரானின் அணுசக்தித் திட்டத்தை அமெரிக்கா ஏற்கெனவே முற்றாக அழித்துவிட்டதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பலமுறை கூறியுள்ளார்.
புளோரிடாவின் வெஸ்ட் பாம் பீச்சில் வெள்ளிக்கிழமை இரவு உரையாற்றிய அவர், அமெரிக்கா ஈரானைத் தாக்கியிருக்காவிட்டால் இஸ்ரேலின் இருப்புக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும் என்றும், ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருந்திருந்தால் அவற்றைப் பயன்படுத்தி மத்திய கிழக்குப் பிராந்தியத்தை அழித்திருக்கக்கூடும் என்றும் தெரிவித்தார்.
மேலும், கடந்த எட்டு மாதங்களாகத் தொடர்ந்த மோதல்களால் ஈரானின் பொருளாதாரமும் இராணுவக் கட்டமைப்பும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் விரும்புவதாகவும் கூறினார்.
“நாங்கள் தற்போது அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். அவர்கள் ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளனர்” என அவர் தெரிவித்தார்.
