Sangathy
News

செங்கடலில் தாக்குதலை நிறுத்தாவிட்டால் தொடர்ந்து தாக்குவோம்: ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை

Colombo (News 1st) செங்கடலில் தாக்குதலை நிறுத்தாவிட்டால் தொடர்ந்து தாக்குவோம்: ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை 

செங்கடலில்  ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை நிறுத்தாவிட்டால், அவர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 

செங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க போர் கப்பலான USS Carney இன்று (13) காலை யேமனின் ரேடார் கட்டமைப்பை இலக்கு வைத்து ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டது

அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட கூட்டு இராணுவத்தினர் தற்போது ஹூதி கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்து 30-க்கும் அதிக தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக வௌ்ளை மாளிகை அறிவித்துள்ளது.

யேமன் தற்போது பெயரளவில் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டாலும் நாடு ஹூதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.

இன்று மீண்டும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு ஒரு சில மணி நேரங்களின் பின்னர் யேமனிலுள்ள ஆயிரக்கணக்கானவர்கள் அந்நாட்டின் தலைநகரான சனாவில் கூடி அமெரிக்கா, பிரித்தானியாவிற்கு எதிராக போராட்டத்தை ஆரம்பித்தனர். 

நேற்று முன்தினம் இரவு அமெரிக்க மற்றும் பிரித்தானிய கூட்டு இராணுவம் யேமனின் தலைநகர் சனா உள்ளிட்ட ஹூதி கிளர்ச்சியாளர்களின் இலக்குகள் மீது டிரோன், ஏவுகணை தாக்குதல் மேற்கொண்ட நிலையில், செங்கடலுக்கு அருகே புதிய யுத்த பதற்றம் உருவானது. 

எனினும், யேமன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அமெரிக்கா நியாயப்படுத்தியுள்ளது. 

செங்கடலில் பயணிக்கும் வர்த்தகக் கப்பல்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள்  மேற்கொள்ளும் தாக்குதல்களைத் தடுத்து, அதனைக் குறைக்கும் நோக்கில் யேமன் மீது தாக்குதல் மேற்கொள்வதாக ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க தூதுவர் லிண்டா தோமஸ் – கிரீன்பீல்ட் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் தெரிவித்தார். 

இதனிடையே, ஹூதி கிளர்ச்சியாளர்களை தாக்குவதற்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அந்நாட்டு காங்கிரஸின் அனுமதியை கோரவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் ஜோ பைடன் மீது காங்கிரஸ் உறுப்பினர்கள் மத்தியில் எதிர்ப்பு வலுப்பெற்றுள்ளது.

சர்வதேச மோதல்களின் போது மேற்கொள்ளப்படும் இராணுவத் தலையீட்டிற்கு காங்கிரஸின் அனுமதி அவசியம் என கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 

ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்வதற்கு பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் எடுத்த தீர்மானம் அந்நாட்டு அரசாங்கத்துடன் உரிய கலந்துரையாடலின்றி எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், எதிர்வரும் திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் இதற்கான காரணத்தை முன்வைப்பதாக  தெரிவித்துள்ளார். 

உண்மையிலேயே செங்கடலை அண்மித்த பகுதியில் ஏன் மோதல் உருவானது? இதன் பூகோள அரசியல் பின்னணி என்ன?

2022 ஆம் ஆண்டு பெப்ரவரி 24 ஆம் திகதி ரஷ்யா, தமது தென்கிழக்கு அயல் நாடான உக்ரைன் மீது மோதலை ஆரம்பித்தது. 

2014 ஆம் ஆண்டு ஆரம்பமான ரஷ்ய உக்ரைன் மோதலின் உச்சகட்டமாக இது பதிவானது.

இரண்டாவது உலகப் போருக்கு பின்னர் ஐரோப்பாவில் பாரிய அகதிகள் நெருக்கடியை உருவாக்கவும் இது காரணமாக அமைந்தது.

உக்ரைனுக்கு பின்னால் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சக்திகள் அணி திரண்டன.

அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கின.

இந்த யுத்தத்தில் ரஷ்யாவுக்கு பாதகமான சூழ்நிலை ஏற்படும் என அநேகமானவர்கள் நினைத்தனர்.

எனினும், இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கம் நடத்திய தாக்குதலுடன் நிலைமை மாறியது. இதன்போது, அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக முன்வந்தன.

உக்ரைனை மையமாகக் கொண்டு இடம்பெற்று வந்த மோதல் மத்திய கிழக்கிற்கு மாறியது.

ஈரானின் ஒத்துழைப்பை பெற்று இயங்குவதாக அமெரிக்கா குற்றம் சுமத்துகின்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த ஆரம்பித்ததால், நிலைமை மோசமடைந்தது.

ட்ரோன், ஹெலிகொப்டர்கள் மற்றும் ஏவுகணைகளை ஹுதி கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்துவதன் ஊடாக அவர்களுக்கு பின்னாலும் வல்லரசு நாடுகள் இருக்கின்றமை உறுதியாகின்றது.

இப்போது இந்த பிரச்சினை சர்வதேச நெருக்கடியாக மாறியுள்ளது.

வல்லரசு நாடுகள் இரண்டு முகாம்களாக பிளவுபட்டுள்ளன.

மோதல் செங்கடலில் இடம்பெறுகின்றது. அதாவது மத்திய கிழக்கு பிராந்தியத்திலேயே மோதல்கள் தொடர்கின்றன.

ஆனால், உலக பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்கும் கப்பல் மூலமான  வர்த்தக வலையமைப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இலங்கை ராஜதந்திரத்துடன் தீர்மானம் மேற்கொள்ள வேண்டிய தருணம் இதுவாகும். 

அமெரிக்கா, இஸ்ரேல் தலைமையிலான தரப்பினர் ஒருபக்கம், பலஸ்தீனுக்கு ஆதரவளிக்கும் தரப்பினர் மறுபக்கம். 

யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக செங்கடலுக்கு கடற்படைக் கப்பலொன்றை அனுப்ப இலங்கையும் இணங்கியுள்ளதாக, கடந்த 03 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார். 

கடற்படை பின்னர் வௌியிட்ட தகவலுக்கமைய, அமெரிக்கா மற்றும் இந்தியா தலைமையிலான தரப்பினர் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக முன்னெடுத்துள்ள கடற்படை நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காகவே இந்த கப்பல் அனுப்பப்படவுள்ளது.

கப்பலை அனுப்பி வைப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதுவரை அதற்கான திகதி  வழங்கப்படவில்லை. 

Related posts

பொருளாதார, வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது குறித்து மலேசிய பிரதமருடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

Lincoln

பொலிஸாரிடமிருந்து காப்பாற்றுங்கள் : பல்கலை மாணவன் மன்றாட்டம்..!

Lincoln

சர்வதேச சிறுவர் தினம் இன்று(01)

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy