Sangathy
India

கனமழைக்கு 11 பேர் உயிரிழப்பு : 4 கோடி பேருக்கு அலெர்ட் மெசெஜ்..!

தமிழகத்தில் கனமழை காரணமாக இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் தணிந்து பல இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் தற்போது கோடைக் காலமா அல்லது மழைக் காலமா என்று தெரியாத சூழல்தான் நிலவுகிறது. இந்த நிலையில் வரும் 24ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த சூழலில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், “இவ்வாண்டு மார்ச் முதல் மே மாதம் 20ம் தேதி வரை 9.63 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 7 சதவிகிதம் குறைவாகும். இன்று காலை 8.30 மணி வரை தமிழ்நாட்டில் 37 மாவட்டங்களில் மழை பெய்துள்ள நிலையில், சராசரியாக 1.77 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதிகப்படியாக நாமக்கல் மாவட்டத்தில் 7.12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

கடலூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னல் தாக்கியதன் காரணமாகவும், திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதாலும் இரண்டு உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன என்றும், தமிழ்நாட்டில் கனமழை காரணமாக 16ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை 11 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் கனமழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 12 கால்நடைகள் இறப்பு ஏற்பட்டுள்ளதோடு 24 குடிசைகள் (வீடுகள்) சேதமடைந்துள்ளன என்றும் விவரித்துள்ளது.

கடந்த ஒரு மாத காலமாக பல மாவட்டங்களில், வெப்பம் இயல்பை விட அதிகரித்து காணப்பட்ட நிலையில், கடந்த ஒரு வார காலமாக பரவலாக மழை பெய்கிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்றைய அறிவிக்கையில், 24ம் தேதி முடிய பல்வேறு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

கனமழை எச்சரிக்கை, பேரிடர் சூழலை கையாள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்றும், மீனவர்களுக்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்பதாலும், திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாலும், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக இருக்கும் பொருட்டு கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள 4.05 கோடி செல்போன்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்தி 18,19,20 ஆகிய தேதிகளில் அனுப்பப்பட்டுள்ளது என்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூறியுள்ளது.

கன மழை எச்சரிக்கையினைத் தொடர்ந்து, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினைச் சார்ந்த 296 வீரர்கள் அடங்கிய 10 குழுக்கள், கன்னியாகுமரி, கோவை, நெல்லை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் போதிய பாதுகாப்புடன் வரவேண்டும் என்றும், சுற்றுலா வருவதை தவிர்க்க எண்ணினால் தவிர்க்கலாம். மாநில மற்றும் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள், கூடுதல் அலுவலர்களுடன் 24 மணிநேரமும் செயல்பட்டு வருவதோடு, நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

Related posts

போதையில் தள்ளாடிய ஆசிரியரை செருப்பால் தாக்கிய பள்ளி மாணவர்கள்..!

tharshi

கைலாசா எங்கு இருக்கிறது? : நித்தியானந்தா வெளியிட்ட அறிவிப்பு..!

Appsron digit

ஓடும் காரின் கதவில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்த வாலிபர் : வீடியோ வைரல்..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy