Sangathy
World Politics

மொத்த உலகமும் ஆடிப் போகும் : தைவான் vs சீனா உலகப் போர் ஆபத்து..!

தைவான் மீது கை வைப்பது மிக ஆபத்தான சூழலை உருவாக்கும் என்றும், உலகின் போக்கையே மாற்றிவிடும் என்று அமெரிக்காவிற்கான ஆஸ்திரேலிய தூதர் கெவின் ருட் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் சீனா கறார் காட்டி வரும் நிலையில், அமெரிக்கா ஆயுத உதவிகள் செய்து வருவது புதிய சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

சர்வதேச அளவில் ரஷ்யா – உக்ரைன் போர், இஸ்ரேல் – காஸா போர் என பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில் ஈரான் – இஸ்ரேல் மோதல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சீனா – தைவான் விவகாரம் புதிய பதற்றத்தை உண்டாக்கி விடுமோ என்ற அச்சம் உண்டாகி இருக்கிறது. சமீபத்தில் தான் தைவான் நாட்டிற்கு புதிய அதிபராக வில்லியம் லாய் பதவியேற்றார்.

இதையடுத்து அந்நாட்டை சுற்றிலும் சீனா ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளது. இது போர் ஒத்திகை போல இருப்பதால் தைவான் மீது தாக்குதல் நடத்தும் திட்டமா? என்ற கேள்வி எழுகிறது.

தைவான் மீது சீனா கெடுபிடி

இதன் பின்னணியை பற்றி தெரிந்து கொள்வது அவசியம். தைவான் தன்னை தனி நாடாக கருதி வரும் நிலையில், சீனாவோ தன்னிடம் இருந்து பிரிந்து சென்ற பகுதியாகவே கருதுகிறது. வரலாற்று தகவல்களின் படி, தெற்கு சீனாவில் இருந்து சென்றவர்கள் தான் தைவானின் பூர்வகுடிகள் என்று தெரிகிறது. இரண்டாம் உலகப் போரின் போது தன்னுடைய குடியரசின் கீழ் தைவானை சீனா கொண்டு வந்தது. அதன்பிறகு பல்வேறு அரசியல் சூழல்களால் தனி நாடாக செயல்படத் தொடங்கியது. சர்வதேச அளவில் 12 நாடுகள் மட்டுமே தைவானை அங்கீகரித்து வருவது கவனிக்கத்தக்கது.

திட்டம் போட்ட ஜி ஜின்பிங்

எனவே மீண்டும் ஒருநாள் சீன குடியரசின் கீழ் கொண்டு வர காய் நகர்த்தி வருகிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு 71 வயது ஆகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் சீன குடியரசை எப்படியாவது விரிவுபடுத்த வேண்டும் என்றும், தன்னுடைய 80வது வயதில் பரந்த சீன தேசத்தை காண வேண்டும் என்றும் கணக்கு போட்டு வைத்துள்ளார். அந்த வகையில் தைவான் மீது சீனாவின் கவனம் திரும்பியிருக்கிறது. இதையொட்டியே ராணுவ நடவடிக்கைகளை அதிகப்படுத்தி வருகிறது. இதனை கவனித்த ஆஸ்திரேலியா எதிர்வினை ஆற்றியுள்ளது.

இரண்டாம் உலகப் போர் ஆபத்து

அமெரிக்காவிற்கான ஆஸ்திரேலிய தூதர் கெவின் ருட் கூறுகையில், தைவான் மீது சீனா போர் தொடுத்தால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும். இரண்டாம் உலகப் போரின் போது எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டதோ, அதுபோன்ற ஒரு சூழல் வந்துவிடும். அதுமட்டுமின்றி உலகின் சூழலையே வேறு மாதிரியாக மாற்றக்கூடும். எனவே சீனா தன்னுடைய ராணுவ நடவடிக்கைகளை குறைத்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

அமெரிக்காவின் ஆயுத உதவிகள்

இந்த சூழலில் தைவானிற்கு பல்வேறு விதங்களில் ஆயுத உதவிகளை அமெரிக்கா செய்து வருகிறது. சமீபத்தில் கூட பெண்டகன் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஏஜென்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், எஃப்-16 போர் விமானத்தின் உதிரி பாகங்கள் மற்றும் பழுது பார்க்க தேவையான பாகங்கள் ஆகியவற்றை வழங்குவதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. இதன்மூலம் தைவான் நாட்டின் பாதுகாப்பிற்கு பலப்படும் என்று தெரிவித்துள்ளது.

சீனா எச்சரிக்கை

இதை கவனித்த சீன அரசு, தைவானிற்கு அமெரிக்கா ஆயுதங்கள் விற்பதை ஏற்க முடியாது. உடனடியாக தங்களது முடிவை மாற்றி கொள்ளலாம். ஒப்பந்தத்தை திரும்ப பெற்று கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. இதனால் சீனா, தைவான், அமெரிக்கா இடையில் மோதல் போக்கு ஏற்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது.

Related posts

உடைந்து விழுந்த பாலத்தின் காப்பீடு இத்தனை பில்லியனா…!

tharshi

ஜப்பானில் பரவும் அரிய வகை நோய்..!

tharshi

பிரிட்டனில் புழக்கத்திற்கு வந்த மன்னர் சார்லஸ் உருவம் பொறித்த கரன்சி நோட்டுகள்..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy