Sangathy
Sports

மகுடம் சூடப்போவது யார்? : இன்று இறுதி ஆட்டத்தில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா..!

9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 1-ம்தேதி தொடங்கியது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் 20 அணிகள் பங்கேற்றன.

லீக் மற்றும் சூப்பர் 8 சுற்று முடிவில் இந்தியா, ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரைஇறுதியை எட்டின.

அரைஇறுதியில் தென்ஆப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும், இந்திய அணி 68 ரன் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தையும் விரட்டியடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

இந்த நிலையில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், தென்ஆப்பிரிக்காவும் பார்படோஸ் தலைநகர் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று (சனிக்கிழமை) இரவு 8 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்தியா

முன்னாள் சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ அணியுமான இந்தியா, நடப்பு தொடரில் தோல்வி பக்கமே செல்லாமல் இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது.

லீக்கில் பாகிஸ்தான் உள்பட 3 அணிகளையும், சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 3 அணிகளையும் தோற்கடித்தது. கனடாவுக்கு எதிரான லீக் மட்டும் மழையால் டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்டது.

அரைஇறுதியில் குல்தீப், அக்ஷர் பட்டேலின் சுழல் ஜாலத்தால் இங்கிலாந்தை போட்டுத்தாக்கிய இந்தியா அதே உத்வேகத்துடன் தென்ஆப்பிரிக்காவையும் எதிர்கொள்ள ஆயத்தமாக உள்ளது.

கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் கடந்த இரு ஆட்டங்களில் பேட்டிங்கில் அசத்தினர். ஆனால் விராட் கோலியின் செயல்பாடு தொடர்ந்து கவலைக்குரியதாக இருக்கிறது. 7 ஆட்டங்களில் 75 ரன் மட்டுமே எடுத்துள்ளார். தொடக்க ஆட்டக்காரர் வரிசைக்கு தாவிய பிறகு அவரது இயல்பான பேட்டிங்கே காணாமல் போய் விட்டது.

இருப்பினும் அவருக்கு ஆதரவாக உள்ள கேப்டன் ரோகித் சர்மா, ‘கோலியின் தரம் குறித்து எங்களுக்கு தெரியும். 15 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் ஆடுபவருக்கு பார்ம் ஒரு பிரச்சினையே இல்லை. அனேகமாக இறுதிப்போட்டியில் ஒட்டுமொத்தமாக தனது சிறந்த இன்னிங்சை வெளிப்படுத்துவார்’ என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.

இதே போல் ஷிவம் துபேவும் கணிசமாக ரன் சேர்க்க வேண்டியது அவசியமாகும். பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா (13 விக்கெட்), அர்ஷ்தீப்சிங் (15), குல்தீப் யாதவ் (10), அக்ஷர் பட்டேல் பிரமாதப்படுத்துகிறார்கள்.

கடந்த ஆண்டில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், 50 ஓவர் உலகக் கோப்பை இரண்டிலும் இறுதிப்போட்டியில் கோட்டை விட்ட இந்தியா இந்த முறை கோப்பையை கையில் ஏந்தி நீண்ட கால ஏக்கத்தை தணிக்குமா என்பதே ரசிகர்களின் பேராவலாகும். விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு இதுவே கடைசி 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியாகும். அதனால் அவர்களும் வெற்றியுடன் நிறைவு செய்ய வேண்டும் என்பதில் தீவிரம் காட்டுவார்கள்.

2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பையை உச்சிமுகர்ந்த பிறகு இந்தியா எந்த ஐ.சி.சி. கோப்பையும் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தென்ஆப்பிரிக்கா

உலக தரவரிசையில் 5-வது இடம் வகிக்கும் தென்ஆப்பிரிக்க அணி மீது ஆரம்பத்தில் பெரிய அளவில் எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. உலகக் கோப்பைக்கு முன்பாக 20 ஓவர் கிரிக்கெட்டில் 11 ஆட்டங்களில் ஆடி 9-ல் தோற்று இருந்தது.

ஆனால் உலகக் கோப்பைக்குள் நுழைந்ததும் பந்து வீச்சுக்கு உகந்த ஆடுகளங்கள் அவர்களுக்கு புதுதெம்பை கொடுத்தது. லீக்கில் 4 வெற்றி, சூப்பர் 8 சுற்றில் 3 வெற்றி, அரைஇறுதி என்று அந்த அணியும் சறுக்கலின்றி வீறுநடை போடுகிறது.

அது மட்டுமின்றி உலகக் கோப்பை போட்டி ஒன்றில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறார்கள். இதற்கு முன்பு அரைஇறுதியை தாண்டியதில்லை. அவர்களின் பேட்டிங் சீரற்றதாக காணப்பட்டாலும் ககிசோ ரபடா (12 விக்கெட்), ஷம்சி (11), அன்ரிச் நோர்டியா (13) மார்கோ யான்சென், கேஷவ் மகராஜ் ஆகிய பந்து வீச்சு கூட்டணி அவர்களுக்கு பக்கபலமாக இருந்து வெற்றியை தேடிக்கொடுத்திருக்கிறது.

இதில் அரைஇறுதியில் ஆப்கானிஸ்தானை 56 ரன்னில் சுருட்டியது கவனிக்கத்தக்கது. பந்து வீச்சில் வலுவாக உள்ள நிலையில் குயின்டான் டி காக், கிளாசென், மில்லர், கேப்டன் மார்க்ரம், ஹென்ரிக்ஸ் ஆகியோரது பேட்டிங் ஒருசேர கிளிக் ஆகும் பட்சத்தில், இன்னும் அபாயகரமான அணியாக மாறி விடுவார்கள். அதனால் களத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மொத்தத்தில் இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுக்கட்டுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம். ஆனால் நெருக்கடியை திறம்பட சமாளிக்கும் அணிக்கே வெற்றி வாய்ப்பு கிட்டும்.

தென்ஆப்பிரிக்காவின் உலகக் கோப்பை கனவு நனவாகுமா? வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் உலகக் கோப்பையை வெல்லும் முதல் ஆசிய அணி என்ற பெருமையை இந்தியா வசப்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இந்த மைதானத்தை பொறுத்தவரை நடப்பு தொடரில் இங்கு 8 ஆட்டங்கள் நடந்துள்ளன. இதில் இந்திய அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 181 ரன்கள் எடுத்து வெற்றி கண்ட ஆட்டமும் அடங்கும். அந்த அனுபவம் இந்தியாவுக்கு கூடுதல் அனுகூலமாக இருக்கும்.

20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 14-ல் இந்தியாவும், 11-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

இன்றைய ஆட்டத்தில் வெற்றி வாகை சூடும் அணிக்கு ரூ.20¼ கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படும். 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.10½ கோடி கிடைக்கும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு :-

இந்தியா: விராட் கோலி, ரோகித் சர்மா (கேப்டன்), ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப்சிங், பும்ரா.

தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், ரீஜா ஹென்ரிக்ஸ், மார்க்ரம் (கேப்டன்), டிரிஸ்டான் ஸ்டப்ஸ், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ யான்சென், கேஷவ் மகராஜ், ககிசோ ரபடா, அன்ரிச் நோர்டியா, தப்ரைஸ் ஷம்சி.

இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை டி.டி. ஸ்போர்ட்ஸ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Related posts

Argentina abandon Buenos Aires bus parade amid jubilant scenes -BBC

Lincoln

குஜராத்துடன் இன்று மோதல்: பிளே ஆப் சுற்று ஆர்வத்தில் ஐதராபாத் அணி..!

tharshi

An indicator of the lay of the land and a boost for South Africa, the country

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy