அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட சீனாவின் எண்ணெய் கப்பல் அமெரிக்க கடற்படையின் முற்றுகை நெருக்கடியிலிருந்து ஹோர்முஸ் நீரிணையை கடந்து சென்றதாகக் கப்பல் போக்குவரத்து தரவுகள் மூலம் வெளிப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு பதிலடியாக ஹோர்முஸ் நீரிணையில் நுழையும் வெளியேறும் கப்பல்களை அமெரிக்கா முடக்கியது. நேற்று திங்கட்கிழமை இரவு முதல் நடைமுறைக்கு வந்த முற்றுகையின் பின்னர், சீனாவுக்கு சொந்தமான ரிச் ஸ்டர்ரி என்ற கப்பல் ஹோர்முஸை கடந்து சென்றுள்ளதாக எல். எஸ். ஈ. ஜி. மரைன் ட்ரபிக், கெப்லர் ஆகியவற்றின் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஈரானுடன் வர்த்தகம் செய்வதற்காக ரிச் ஸ்டர்ரி கப்பலும் அதன் உரிமையாளரான ஷங்காய் சுவான்ரன் ஷிப்பிங் கோ லிமிற்றெட் நிறுவனமும் அமெரிக்காவால் தடை செய்யப்பட்டிருந்தன.
தரவுகளின்படி, ரிச் ஸ்டர்ரி ஒரு நடுத்தர தூர எண்ணெய் கப்பலாகும். அந்தக் கப்பல் இரண்டரை இலட்சம் பீப்பாய் எரிபொருளை ஏற்றிச் செல்கிறது. இறுதியாக, அந்தக் கப்பல் ஐக்கிய அரபு அமீரகத்தில் சரக்கை ஏற்றியது என்று தரவுகள் காட்டின. சீனாவுக்கு சொந்தமான இந்தக் கப்பலில் சீனாவை சேர்ந்தவர்கள் மட்டுமே உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
இதேநேரம், அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட மற்றொரு கப்பலான முர்லிகிஷன் ஹோர்முஸ் கடல் வழித்தடத்தில் நுழைந்ததாகவும் தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன. முன்னர் எம். கே. ஏ. என்று இந்தக் கப்பல் அறியப்பட்டது.
