மலேசியா நோக்கி சுமார் 250 அகதிகளுடன் சென்ற படகு கடலில் மூழ்கியுள்ளது என்று அறிய வருகிறது. இந்தப் படகு மூழ்கி 5 நாட்கள் கடந்த நிலையில் அதிலிருந்தவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.
பலத்த காற்று, கடற்கொந்தளிப்பு, படகின் கொள்ளளவை விட அதிகமானோர் பயணித்தமையாலேயே இந்தப் படகு கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
பங்களாதேஷில் இருந்து மியான்மரைச் சேர்ந்த ரொஹிங்கியர்கள் பயணித்த படகே இவவாறு கடலில் மூழ்கியுள்ளது. கடந்த 4ஆம் திகதி பயணித்த இந்தப் படகு கடந்த 7 அல்லது 8ஆம் திகதி புயலில் சிக்கி கடலில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது.
படகு மூழ்கி இரு நாட்களின் பின்னர் – அதாவது, கடந்த 11ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில் மரக்கட்டைகளை பிடித்தபடி மீட்கப்பட்ட 9 அகதிகள் மீட்கப்பட்டனர். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையிலேயே படகு மூழ்கிய விவரம் வெளிப்பட்டுள்ளது.
பௌத்தர்கள் பெரும்பான்மையினராக வாழும் நாடான மியன்மாரில் ரொஹிங்கிய முஸ்லிம் மக்கள் சிறுபான்மையினராவார். இராணுவ ஆட்சியின் கீழுள்ள அந்த நாட்டில் ரொஹிங்கியர்களுக்கான குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது. அத்துடன், அரச படைகள் ரொஹிங்கிய மக்களை விரட்டி வருவதுடன் அவர்களுக்கு எதிராக குற்றங்களையும் இழைத்து வருகின்றன.
இதனால், பெரும்பாலான ரொஹிங்கிய மக்கள் அயல் நாடான பங்களாதேஷூக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். ஆனால், பங்களாதேஷில் நிலவும் மோசமான வாழ்க்கை நிலைமையால் ரொஹிங்கிய மக்கள் ஆபத்தான கடல் பயணங்களில் ஈடுபட்டு பிறநாடுகளில் புகலிடம் கோரி வருகின்றனர். இதனாலேயே, முஸ்லிம் நாடான மலேசியாவுக்கு அதிகளவான ரொஹிங்கியர்கள் புலம்பெயர்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
