ஈஸ்டர் தாக்குதல் விசாரணையை சீர்குலைக்க அரச அதிகாரிகள் முயற்சி – பேராயர் மல்கம் ரஞ்சித் குற்றச்சாட்டு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் தற்போதைய அரசாங்கம் சாதகமான போக்கைக் கடைப்பிடித்து வரும் நிலையில், சில அரச அதிகாரிகள் அதனை சீர்குலைக்க முயற்சிப்பதாக பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சுமத்தியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் ஏழாம் ஆண்டு நினைவேந்தல் நிமித்தம் இன்று செவ்வாய்க்கி்ழமை நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் சக்திகள் உள்ளனவா என்ற கேள்வி எழுவதாகத் தெரிவித்த கர்தினால் ஆண்டகை, அவ்வாறு இல்லையெனில் உண்மையைத் தேடும் பயணத்திற்கு ஏன் இவ்வளவு தடைகளை ஏற்படுத்துகிறார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவினால் கூட ஆழமாக ஆராய முடியாமல் போன சில விடயங்கள் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், ‘அபு ஹிந்த்’ என்பவர் யார் என்பதைக் கண்டறிவது முக்கியம் என்றும் கூறினார்.

சஹ்ரானுடன் தொடர்புகளைப் பேணியதாகக் கூறப்படும் அந்த நபர் பற்றிய தகவல்களைத் தேடுவது மிகவும் அவசியமானது என்றும், அபு ஹிந்தின் அடையாளம் குறித்து சி.ஐ.டி விசாரணை நடத்துவதாக ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அப்போதைய அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் நிலாந்த ஜயவர்தனவின் அலைபேசி மற்றும் கணினியில் இருந்த அனைத்து தரவுகளும் அழிக்கப்பட்டுள்ளதாக சாட்சியங்கள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் நிலாந்த ஜயவர்தன வேண்டுமென்றே தாக்குதல் குறித்த உண்மைத் தகவல்களை மறைத்தாரா? அப்படியென்றால் அவர் ஏன் அவ்வாறு செய்தார்? என்றும் கர்தினால் ஆண்டகை இதன்போது கேள்வி எழுப்பினார்.

“இந்தக் கொடூரக் கொலைகளுக்குப் பின்னால் இருப்பவர்கள் யார் என்பதை எமக்கு வெளிப்படுத்துங்கள். இலங்கையில் பல தசாப்தங்களாக இடம்பெற்ற பல்வேறு கொலைகள், காணாமல் ஆக்கப்படுதல்கள் மற்றும் படுகொலைகளுக்குப் பின்னாலுள்ள நோக்கம் என்ன?

அவற்றைச் செய்தது யார் என்பதைத் தேடிக் கண்டறியாமல் அனைத்தும் காலவோட்டத்தில் மறைந்துபோக அனுமதிப்பது நமது நாட்டில் அண்மைக்காலத்தில் உருவாகியுள்ள மிக ஆபத்தான போக்காகும். 70களில் ஆரம்பமான இது, அண்மைக்காலம் வரை நீடித்த ஒரு தேசிய பேரழிவாகும்.

இந்த பாரிய விழுமியச் சீரழிவு காரணமாக, ஒழுக்கம், சட்டத்திற்கு மதிப்பளிக்கும் உயரிய பண்பு மற்றும் நாகரீகமான நடத்தை முறை என்பன எமது நாட்டை விட்டு வெளியேறிவிட்டன. இவ்வாறானதொரு சூழலில் இலங்கையில் கடந்த 4 தசாப்த காலப்பகுதியில் இடம்பெற்ற கொலைகள், காணாமல் ஆக்கப்படுதல்கள் மற்றும் ஊழல்கள் குறித்து நேர்மையான விசாரணைகளை முன்னெடுப்பது அரசியல் தலையீடுகள் மற்றும் பொய்களின் செயற்பாட்டினால் கடினமாகியுள்ளது என்றே கூறவேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலும் அத்தகையதொரு சோகமான அனுபவமாகும். அதன் பாதிக்கப்பட்டவர்கள் அனுபவிக்கும் சொல்லொணாத் துயரம் எந்தவொரு நிறுவனத்திற்கும் அல்லது தனிநபருக்கும் புரிகிறதா என்ற கேள்வி எழுகிறது. சில தரப்பினர் விசாரணைகளை சுதந்திரமாக முன்னெடுப்பதற்கான வாய்ப்புகளை ஏன் தடுக்க முயல்கிறார்கள் என்பது எமக்கு விளங்கவில்லை.

2024 ஒக்டோபர் 6ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்த போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உண்மை காலவோட்டத்தில் மறைந்துபோக இடமளிக்கப் போவதில்லை என உறுதியளித்திருந்தார்.

அந்த வாக்குறுதியை யதார்த்தமாக்கி, முழுமையான, வெளிப்படையான, உண்மையின் அடிப்படையிலான விசாரணையை நடத்தி அதன் உண்மையை எமக்கு வெளிப்படுத்துமாறு நாம் கேட்டுக்கொள்கிறோம்.” என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles