பாலியல் துன்புறுத்தலை யாராவது நேரில் காண நேரிட்டால், அது குறித்துப் முறைப்பாடு செய்யத் தயங்க வேண்டாம் என்று சிங்கப்பூர் உள்துறை மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் கேட்டுக்கொண்டுள்ளார்.
‘அத்தகைய குற்றங்கள், பாதிக்கப்பட்ட நபரை மட்டுமல்லாது அவர்களின் குடும்பத்தினரையும் சமூகத்தையும் சேர்த்தே பாதிக்கின்றன. எனவே, பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள், சம்பவம் எப்போது நடந்திருந்தாலும் அது குறித்துப் முறைப்பாடு செய்ய முன்வர வேண்டும்,’ என்று அவர் வலியுறுத்தினார்.
சம்பவம் நடந்தவுடன் விரைவாகப் முறைப்பாடு செய்வது, தடயங்களைப் பாதுகாக்கவும் குற்றவாளிகளுக்குச் சட்டப்படி தண்டனை பெற்றுத் தரவும் உதவும்; இதன்மூலம் மேலும் தீங்கு விளைவிக்கப்படுவதைத் தவிர்க்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
பொலிஸ் வளாகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற பாலியல் குற்ற விழிப்புணர்வுக் கருத்தரங்கில் சிம் இதனைத் தெரிவித்தார். பொதுமக்கள் இத்தகைய குற்றங்களைப் முறைப்பாடு செய்வதை ஊக்குவிக்கும் வகையில், ஓராண்டுகால விழிப்புணர்வு இயக்கத்தை பொலிஸார் ஆரம்பிக்கவுள்ளனர்.
சிங்கப்பூரில் பாலியல் குற்ற நிலவரம் சீராக இருந்தாலும், சில அம்சங்கள் கவலையளிப்பதாகத் திருவாட்டி சிம் கூறினார். சிங்கப்பூரில் நிகழ்ந்த மானபங்கச் சம்பவங்களின் எண்ணிக்கை 2024இல் 1,427ஆக இருந்த நிலையில், அது 2025இல் 1,531ஆக அதிகரித்தது.
அவற்றில் ஏறக்குறைய 76 வீத சம்பவங்கள், பொதுப் போக்குவரத்து, இரவுக் கேளிக்கை விடுதிகள் போன்ற பகுதிகளில் நிகழ்ந்தன.
இதனைத் தடுக்க, மே முதல் பொது இடங்கள், பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்புகள், கேளிக்கை விடுதிகளில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஆண்டின் கடைசிக் காலாண்டில், கேளிக்கை விடுதிகளின் கண்ணாடிகளில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகள் ஒட்டப்படும்.
இதுபோக, பாலியல் குற்றங்களை நேரில் காண்பவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறையும் அறிமுகப்படுத்தப்படும். பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கும் வகையில் உள்துறை அமைச்சு கடந்த சில ஆண்டுகளில் சட்டங்களை வலுப்படுத்தியுள்ளதாகத் திருவாட்டி சிம் தெரிவித்தார்.
பொதுமக்கள் விழிப்புடன் செயல்படுவதன் மூலம், குற்றவாளிகளுக்குக் குற்றம் புரிவதற்கு வாய்ப்புக் கிடைக்காமல் தடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
