தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணியை அளவீடு செய்யும் பணிகள் இரண்டாம் தடவையாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைவிடப்பட்டுள்ளது.
தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணியின் காணி உறுதிகள் வைத்திருக்கும் உரிமையாளர்கள் 17 பேரினதும் காணிகளின் வரைபடத்தை கீறுவதற்கு அளவீடு செய்யும் பணிகளுக்கு காணி உரிமையாளர்கள் விகாரை பகுதிக்கு அழைக்கப்பட்டனர்.
அதற்காக விகாரை பகுதிக்கு வந்தவர்களை விகாரை அமைந்துள்ள பகுதிக்கு சற்று தொலைவில் பொலிஸார் வீதி சோதனை சாவடியை அமைந்து, காணி உறுதிகள், அடையாள அட்டைகளை பரிசோதித்து தான் அனுமதிப்போம் என பொலிஸார் கூறியமையால், காணி உரிமையாளர்களுக்கும், பொலிஸாருக்கும் தர்க்கம் ஏற்பட்டது.
அதனை அடுத்து அவ்விடத்திற்கு வருகை தந்த கிராம சேவையாளர் காணி உரிமையாளர்களை அங்கிருந்து விகாரை பகுதிக்கு அழைத்து சென்றார்.
அங்கு, காணி உரிமையாளர்கள் ‘காணியை விடுவிக்கும் நோக்குடனையே காணிகளை அளக்கின்றோம்’ என எழுத்தில் உறுதி மொழி தர வேண்டும் என அதிகாரிகளிடம் கோரினர். அவ்வாறு நாம் எழுத்தில் தர முடியாது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கபட்டமையால் நீண்ட இழுபறி ஏற்பட்டது.
பின்னர், விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான ‘பவானி’ வீதி அமைந்துள்ளமையால், அவற்றினை அளவீடு செய்யும் பணிகள் இடம்பெற்றன.
காணி உரிமையாளர்கள் ‘காணிகளை விடுவிக்கும் நோக்குடனையே அளக்கின்றோம்’ என எழுத்து மூல உறுதி மொழி தராது விடின் காணிகளை அளவீடு செய்ய சம்மதிக்க மாட்டோம் என உறுதியாக நின்றமையால், காணி அளவீட்டு பணிகள் இரண்டாம் தடவையாக இன்றைய தினமும் கைவிடப்பட்டது.

