உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அசாத் மௌலானாவிடம் நேரடி விசாரணைகளை நடத்துவதற்காக சி. ஐ. டி. பணிப்பாளர் ஷானி அபேசேகர தலைமையிலான குழு பிரான்ஸ் செல்லவுள்ளது என்று அறிய வருகிறது.
பிள்ளையானின் முன்னாள் ஊடகப் பேச்சாளரான அசாத் மௌலானா தற்போது வெளிநாட்டில் வசிக்கிறார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அவரிடம் வாக்குமூலத்தை அதிகாரிகள் கோரி வருகின்றனர்.
சர்வதேச ரீதியாக முன்னெடுக்கப்படும் இந்த புலனாய்வு முயற்சி தாக்குதலின் சூத்திரதாரிகளை அடையாளம் காணபதற்கான ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. எனினும், இந்த இரகசியப் பயணம் தொடர்பாக குற்றப் புலனாய்வு பணியகமோ அல்லது பாதுகாப்பு அமைச்சோ உத்தியோகபூர்வ தகவல் எதனையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்காக நடத்தப்பட்ட சதித்திட்டம் என்றும் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புக்கும் அரச புலனாய்வு பிரிவுக்கும் தொடர்புகள் இருந்தன என்று தான் அறிந்திருந்தார் என்றும் பிரிட்டனின் சனல் -4 தொலைக்காட்சியின் ஆவணப் படத்தில் அசாத் மௌலானா குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
