மலேசியாவின் ஜொகூர், பாரிட் சுலோங்கிற்கு அருகிலுள்ள எஸ்.கே. ஸ்ரீ மைமோன் பள்ளியின் நுழைவாயிலில் நேற்று மதியம் ஒரு வேன் மோதியதில் இரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் உயிரிழந்தார்.
எட்டு வயதான நூர் ஐனி உமைரா ஃபரீஸ், மதியம் சுமார் 12.40 மணியளவில் பாடசாலையை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தபோது வான் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திலேயே மருத்துவ அதிகாரிகள் அச்சிறுமியின் மரணத்தை உறுதி செய்தனர்.
சில பொருட்களை விநியோகித்த பிறகு, பாடசாலை வளாகத்தை விட்டு வெளியேறி, நுழைவாயிலில் இருந்து வெளியே வரும்போது அந்த வான் சிறுமி மீது மோதியதாகக் கூறப்படுகிறது. தங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்ல அங்கு வந்திருந்த பல பெற்றோர்கள் இந்தச் சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.
சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக சுல்தானா நோரா இஸ்மாயில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
