மலேசியாவின் ஜொகூர் மாநில சட்டசபை கலைக்கப்பட்டு விரைவில் மாநிலத் தேர்தல் நடைபெறும் என்ற பரவலான வதந்திகளுக்கு முதலமைச்சர் Menteri Besar Johor, Datuk Onn Hafiz Ghazi முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இஸ்கந்தர் புத்ரியில் நடைபெற்ற ஜொகூர் மாநில சட்டசபை கூட்டத்தொடரில் உரையாற்றிய அவர், “ஜொகூர் மாநில சட்டசபை இன்று கலைக்கப்படாது” என்று தெளிவாக அறிவித்தார். மேலும், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தேர்தல் குறித்து கவலைப்படாமல் மக்களுக்கான சேவையில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மாச்சாப் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அவர், “மாநிலத் தேர்தல் நடைபெறும் என பல்வேறு ஊகங்களும் வதந்திகளும் பரவி வருகின்றன. இன்று மே 7ஆம் திகதி அந்த வதந்திகளுக்குப் பதில் அளிக்க விரும்புகிறேன். ஜொகூர் சட்டசபை கலைக்கப்படாது. ஆகவே அனைவரும் அமைதியாக இருக்கலாம்,” என்றார்.
மேலும், “மக்களுக்கும் ஜொகூர் மாநிலத்திற்குமான பல திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகள் இன்னும் செயல்படுத்தப்பட வேண்டியுள்ளது. எனவே தேர்தல் குறித்து இப்போது சிந்திக்காமல், மக்களுக்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.
