தென்கொரியாவில் பௌத்த மத சடங்குகளில் ரோபோ துறவி அதிகாரபூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது.
வெசாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு நேற்று – மே 6ஆம் திகதி தென்கொரிய தலைநகர் சியோலில் உள்ள ஜொக்யேசா விகாரையில் நடந்த சடங்குகளில் இந்த ரோபோ துறவி பங்கேற்றிருந்தது.
காபி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ 130 சென்ரிமீற்றர் உயரம் கொண்டது. மனித உருவ அமைப்புக் கொண்ட இந்த ரோபோவுக்கு புனித ஆடையும் அணிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சடங்கின்போது, ‘பௌத்த மதத்துக்கு என்னை முழுமையாக அர்ப்பணிப்பு செய்கிறேன்’, என்று கூறிய இந்த ரோபோ, மனிதர்களுக்கு இணையாக பௌத்த வணக்க முறைமைகளையும் பின்பற்றியது.
இளைய தலைமுறையினரை பௌத்த மதத்தின்பால் ஈர்க்கவும் விகாரைகளில் நிலவும் துறவிகள் தட்டுப்பாட்டுக்கு தீர்வாகவும் இவ்வாறான தொழில்நுட்ப முயற்சி முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
